உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தி.மு.க., நிர்வாகிகளுக்கு நள்ளிரவில் நடந்த பட்டுவாடா!

தி.மு.க., நிர்வாகிகளுக்கு நள்ளிரவில் நடந்த பட்டுவாடா!

''சிறப்பு பூஜை நடத்த அனுமதிப்பாளான்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என்ற படியே, பில்டர் காபியை பருகினார் குப்பண்ணா.''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''விவசாயத்தை பிரதானமா கொண்ட ஈரோடு மாவட்டத்தில், கடும் வறட்சி நிலவறது... விவசாய பணிகள் எல்லாம் முடங்கி போயிடுத்து ஓய்...''பவானிசாகர் அணை நீர்மட்டமும் குறைஞ்சுண்டே போறது... இதனால, மாவட்டம் முழுக்க மழை பெய்ய வேண்டி, வருண பகவானுக்கு பூஜை பண்ணினா பலன் கிடைக்கும்னு சிலர் நம்பறா ஓய்...''ஆனா, கோவில்கள்ல சிறப்பு பூஜைகள், யாகம் வளர்க்கணும்னா அரசின் அனுமதி அவசியம்... அது மட்டும் இல்லாம, அதுக்கு தனியா நிதியும் ஒதுக்கணும் ஓய்...''திராவிட மாடல் அரசுல இதுக்கெல்லாம் ஒத்துப்பாளான்னு தெரியல... இதனால, 'மாவட்ட அமைச்சரான முத்துசாமி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசி, பர்மிஷன் வாங்கி தந்தா நன்னாயிருக்கும்'னு விவசாயிகள் எல்லாம் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''என்கிட்டயும் அறநிலையத் துறை தகவல் ஒண்ணு இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சியில், 2000 வருஷம் பழமை வாய்ந்த விமீஸ்வரர் கோவில் இருக்கு... அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமா 2 ஏக்கர் நிலம், பக்கத்துலயே இருக்கு வே...''ஊராட்சியில் முக்கிய பதவியில இருக்கிறவர், அறநிலையத் துறையிடம் எந்த அனுமதியும் வாங்காம, அந்த நிலத்தை வார சந்தைக்கு வாடகைக்கு விட்டு, தன் ஆட்களை விட்டு வாரா வாரம் வாடகை வசூல் பண்ணி, பாக்கெட்டுல போட்டுக்கிடுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.''ஏழுமலை, கொஞ்சம் தள்ளி உட்காருங்க...'' என்றபடியே வந்த அந்தோணிசாமி, ''நடுராத்திரியில வந்து பட்டுவாடா பண்ணிட்டாங்க...'' என்றார்.''தேர்தல் தான் முடிஞ்சிட்டே... இன்னும் என்ன வே பட்டுவாடா...'' என கேட்டார், அண்ணாச்சி.''அரக்கோணம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளரா ஜெகத்ரட்சகன் போட்டியிட்டாரே... தொகுதி முழுக்க 70 சதவீதம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு தலா 250 வீதம் குடுத்தாங்க...''ஆனா, திருத்தணி சட்டசபை தொகுதிக்கு மட்டும், கடைசி நேரத்துல பணம் எடுத்துட்டு வர முடியல... வேட்பாளர் தரப்புல, அந்த தொகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டவங்க, 'தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கெடுபிடியால, சென்னையில இருந்து பணத்தை எடுத்துட்டு வர முடியலை... அதனால, நீங்க லோக்கல்ல ஏற்பாடு பண்ணி குடுத்துடுங்க... தேர்தல் முடிஞ்சதும் பைசல் பண்ணிடுறோம்'னு சொல்லியிருக்காங்க...''உள்ளூர் நிர்வாகிகளும், தங்களது சொந்தப் பணம் மற்றும் தெரிஞ்சவங்களிடம் லட்சக்கணக்குல கடன் வாங்கி, வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்ணிட்டாங்க... ஆனா, தேர்தல் முடிஞ்சு ரெண்டு வாரமாகியும், வேட்பாளர் தரப்புல இருந்து பதிலே வராம, எல்லாரும் பயத்துல இருந்தாங்க...''இந்த சூழல்ல, சமீபத்துல சென்னையில இருந்து ரெண்டு கார்கள்ல 3 கோடி ரூபாயுடன் வந்த சிலர், ராத்திரி 11:30 மணியில இருந்து, அதிகாலை 3:00 மணி வரைக்கும் உள்ளூர் நிர்வாகிகளை கூப்பிட்டு, பணத்தை செட்டில் பண்ணிட்டாங்க... ''ஒரு சிலருக்கு ஒரு மாசம் வட்டியும் சேர்த்து பைசல் பண்ணியிருக்காங்க... பணத்தை பார்த்ததும் தான், உள்ளூர் நிர்வாகிகளுக்கு உயிரே வந்துச்சுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suriyanarayanan
மே 12, 2024 10:20

எய்தவன் எங்கு இருக்க அம்பை நோவது ஏன்? கோவில் நிலம் என்று சொல்லும் அரசுக்கு கட்டுமான நிறுவனம் செய்த தவறா? மக்கள் வில்லங்க சான்று பார்த்து வாங்கியது தவறா? யாரைத்தான் நம்புவதோ? அனைத்தும் ஆராய்ந்து வாங்கிய மக்கள் நிம்மதியாக இல்லை மறப்போம் மண்ணிப்போம் நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும் கோயில் நிலம் அரசு செய்ய வேண்டியது இனிவரும் காலங்களில் பாதுகாத்து வரட்டும் கட்டிடங்கள் கட்டி மக்கள்பல ஆண்டுகள் வாழ்ந்து வருவதை எந்த தவறும் செய்யாத மக்களுக்கு உதவ அரசு முன் வர வேண்டும் நன்றி


D.Ambujavalli
மே 12, 2024 06:34

பின்னே, யாரோ தேர்தலில் நிற்க, வாக்காளர்களுக்கு கொடுக்க இவர்கள் பர்ஸைத் திறக்க நேர்ந்ததுடன் அதை ஈடு செய்யக்கூட தாமதித்தால், புகார் மேலிடத்துக்குப் போகுமா, பொதுவெளியில் கடை விற்பார்களா என்ற பதற்றம் இருக்கத்தானே செய்யும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை