உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பணத்தை அமுக்கியவர்களுக்கு மண்டகப்படி!

பணத்தை அமுக்கியவர்களுக்கு மண்டகப்படி!

''சென்னை மாநகராட்சி யுடன் இணைக்க கூடாதுன்னு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''எந்த ஊர் மக்கள் இப்படி சொல்றாங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், வெள்ளானுார் ஊராட்சியின் சமூக நல மேம்பாட்டு சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் இணைந்து, ஊரக வளர்ச்சி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியிருக்காங்க...''அதுல, 'எங்க ஊராட்சியில், 25,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறாங்க... ஆடு, மாடு மேய்க்கிறது, விவசாயம் தான் முக்கிய தொழில்... இதுல, 1,000த்துக்கும் மேற்பட்டவங்க, 100 நாள் வேலை திட்டத்துல பணிபுரியுறாங்க... எங்க ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைச்சுட்டா, வாழ்வாதாரமே முடங்கி போயிடும்'னு முறையிட்டிருக்காங்க..'' என்றார், அந்தோணிசாமி.''சோஷியல் இன்ஜினியரிங்கால இந்த ஓட்டுகள் கிடைச்சதுன்னு பெருமைப்படறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''மதுரை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசன், 2016 திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல்ல வெறும் 6,000 சொச்ச ஓட்டுகள் தான் வாங்கியிருந்தார்... எட்டு வருஷ கட்சி வளர்ச்சியை கூட்டி கழிச்சு பார்த்தாலும், ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ஓட்டுகள் தான் தேறும்னு நினைச்சார் ஓய்...''ஆனா, அ.தி.மு.க.,வையே பின்னுக்கு தள்ளி, 2.20 லட்சம் ஓட்டுகளை அள்ளிட்டார்... இத்தனைக்கும், கூட்டணியில இருந்த பா.ம.க.,வுக்கு இங்க ஓட்டு வங்கியே கிடையாது ஓய்...''அதே நேரம், தொகுதியில் 14 முக்கிய சமுதாயத்துலயும் செல்வாக்குள்ள பிரமுகர் களை கணக்கெடுத்து, அந்த சமுதாய கூட்டங்களுக்கு ஏற்பாடு பண்ணி, பா.ஜ.,வினர் பிரசாரம் பண்ணியிருக்கா... சில இடங்கள்ல நள்ளிரவு தாண்டியும், சமுதாய பிரமுகர்கள் வசிக்கற பகுதிக்கே போய் ஓட்டு கேட்டிருக்கா ஓய்...''இதுக்கு, 'சோஷியல் இன்ஜினியரிங்'னு பெயர் சூட்டியிருந்தா... 'இதே டெக்னிக்கை சட்டசபை தேர்தல்லயும் பின்பற்றி, ஜெயிச்சு காட்டுவோம்'னு பா.ஜ., தரப்பினர் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''பணத்தை பதுக்கியவங்களுக்கு ஆப்பு காத்திருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலுார் தொகுதியில் பா.ஜ., கூட்டணியில போட்டியிட்டாருல்லா... எப்படியாவது ஜெயிச்சு, மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்கணும்னு பணத்தை தண்ணியா இறைச்சாரு வே...''இவரது கனவை தெரிஞ்சுக்கிட்ட மாவட்ட, மாநில மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலர், 'நீங்க ஜெயிச்சு மத்திய அமைச்சராவது உறுதி'ன்னு உசுப்பேத்தி பணத்தை கட்டு கட்டா கறந்திருக்காவ... தபால் ஓட்டு, வாக்காளர்களுக்கு, ஜாதி அமைப்புகளுக்குன்னு தனித்தனியா கணக்கு சொல்லி, லட்சக்கணக்குல வாங்கி, சுருட்டிட்டாவ வே...''கடைசியில, பாரிவேந்தர் மூணாவது இடத்துக்கு போயிட்டாரு... 2014ல் பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்டப்ப 2.38 லட்சம் ஓட்டுகள் வாங்கியவர், இப்ப 1.62 லட்சம் தான் வாங்கினாரு வே...''இதனால, தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியவங்க கடந்த மூணு மாசத்துல வாங்கிய சொத்துக்கள் சம்பந்தமா பட்டியல் எடுத்துட்டு இருக்காரு... சீக்கிரமே இவங்களுக்கு, 'மண்டகப்படி' இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூன் 09, 2024 11:54

கடைசியில் ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், பணத்தை தண்ணீராக இறைத்தும் தோற்றுவிட்டார். இவர் கல்லூரி அட்மிஷனில் ஏமாற்றுவது போல் கட்சிகாரர்கள் காலைவாரி விட்டனர்.


மேலும் செய்திகள்