''கார்ப்பரேஷனுடன் இணைக்கப்டாதுன்னு சொல்றா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாநகராட்சி எல்லையில் இருக்கற சோமையம்பாளையம், பன்னீர்மடை, அசோகபுரம், குருடம்பாளையம், வெள்ளானப்பட்டி, கீரணத்தம் ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுத்துண்டு இருக்கா ஓய்...''ஏற்கனவே, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகள்ல, அடிப்படை வளர்ச்சி பணிகள் மெத்தனமா நடக்கறது... இதுல, இந்த ஊராட்சிகளையும் இணைச்சுட்டா, அங்க எல்லாம் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பலருக்கு வேலை போயிடும் ஓய்...''அதுவும் இல்லாம, வரிகளும் மூணு மடங்கு உசந்துடும்... அதனால, 'எங்களை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது'ன்னு இந்த ஊராட்சி மக்கள், அரசுக்கு மனுக்கள் அனுப்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''என்னதான், 'ஆன்லைன்' வந்தாலும், 'ஆப்லைன்ல' கவனிச்சா தான் காரியம் நடக்கு வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''சேலம் மாவட்டம், மேட்டூர் வருவாய் குறு வட்டத்தில் அஞ்சு கிராமங்கள் இருக்கு... இந்த குறுவட்டத்துக்கு, தமிழ் கடவுள் பெயர் கொண்டவர் வருவாய் அதிகாரியா இருக்காரு வே...''இருப்பிடம், ஜாதி, முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்க, மக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்காவ... அதை வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., துணை தாசில்தார்னு படிப்படியா ஆய்வு பண்ணி முடிச்சதும், தாசில்தார் சான்றிதழ் தருவாரு வே...''ஆனா, வி.ஏ.ஓ.,க்கள் ஒப்புதல் வழங்கியதும், வருவாய் அதிகாரி ஒப்புதல் தர மாட்டேங்காரு... அவரை தனியா பார்த்து, தட்சணை வச்சா தான், ஒப்புதல் தர்றாரு வே...''அப்படி கவனிக்கலைன்னா, ஏதாவது சொத்தையான காரணத்தை சொல்லி, விண்ணப்பத்தை தள்ளு படி பண்ணிடுதாரு... இப்ப, ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் நடக்கிற நேரத்துல, மாணவர்கள் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிச்சுட்டு அலையுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''ஒரே வழக்குல சிக்கிய ரெண்டு பேர்ல, ஒருத்தருக்கு மட்டும் தண்டனையான்னு குமுறிட்டு இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து அமைச்சரா இருந்த செந்தில் பாலாஜி, பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய வழக்குல சிக்கியிருக்காரே... இதே வழக்குல சிக்கிய அதிகாரி ஒருத்தர், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துல பணிபுரிந்து, சமீபத்துல ரிட்டயர் ஆனாருங்க...''லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு சிறப்பா ஒத்துழைப்பு குடுத்து, தன் மேல எந்த தவறும் இல்லன்னு நிரூபிச்சு, பிரச்னையில்லாம வீட்டுக்கு போயிட்டாருங்க... அதே சமயம், செந்தில் பாலாஜியுடன் அதே வழக்குல சிக்கிய மற்றொரு அதிகாரி, திருப்பூர் மண்டலத்துல உயர் அதிகாரியா இருந்தாரு... ஆனா, ரிட்டயர் ஆகுறதுக்கு முதல் நாள் இவரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க...''இதை பார்த்துட்டு, 'முன்னவர் நெளிவு, சுழிவு தெரிஞ்சவர், அதனால விசாரணையில மாட்டிக்காம நழுவிட்டாரு... பின்னவருக்கு விபரம் பத்தாம மாட்டிக்கிட்டாரு'ன்னு, சக அதிகாரிகள் வருத்தப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.