உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வழக்கில் சிக்கியும் வசூலை நிறுத்தாத அதிகாரி!

வழக்கில் சிக்கியும் வசூலை நிறுத்தாத அதிகாரி!

''சொந்த கட்சி வேட்பாளர் தோற்பார்னு பந்தயம் கட்டாத குறையா இருந்தாருங்க...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''கோவை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் ஜெயிக்கவே கூடாதுன்னு, திட்டமிட்டு வேலை பார்த்த ஒரு மாவட்ட நிர்வாகியை தான் சொல்றேன்... அந்த நிர்வாகியின் பூத்துலயே, ஆளுங்கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைச்சிருப்பதே இதற்கு சாட்சிங்க...''தேர்தலுக்கு முன்னாடியே, தனக்கு நெருக்கமான கட்சியினரிடம் அவர், 'போங்கண்ணா... போய் வேற வேலை இருந்தா பாருங்க... தோற்கிறவருக்கு எதுக்கு வேலை பார்க்கணும்'னு நக்கலா பேசியிருக்காருங்க...''ஓட்டுப்பதிவு முடிஞ்ச பிறகும், 'அவரெல்லாம் ஜெயிக்க வாய்ப்பேயில்லை'ன்னு வெளிப்படையா சொல்லியிருக்காரு... ஜாதி பாசத்துல, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கன்னு, தன் கட்சியில இருக்கிற தன் சமுதாயத்தினரிடம் சொல்லியிருக்காருங்க... இது எல்லாம் தலைமைக்கும் போயிடுச்சு... சீக்கிரமே இவரது தலை உருளும்னு பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''இந்த தேர்தல்ல, நடிகர் கார்த்திக் தலையே காட்டலையே...ரெஸ்ட் எடுக்க போயிட்டாரோ...'' என்றபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''மீன் வியாபாரியிடம் பாக்கி வச்சிருக்காவ வே...'' என்றார்.''விளக்கமா சொல்லும்ஓய்...'' என்றார், குப்பண்ணா.''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மீன் வியாபாரி வெள்ளதுரை, தொழில் போட்டியால போன வாரம் வெட்டி கொலை செய்யப்பட்டாருல்லா... இது சம்பந்தமா, மூணு பேரை கைது பண்ணியிருக்காவ வே...''கோவில்பட்டி மேற்கு போலீசார் தான் இந்த வழக்கை விசாரிக்காவ... வெள்ளதுரை மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியிருக்காவ வே...''அப்ப, 'என் வீட்டுக்காரர் பல போலீசாருக்கு கடனுக்கு மீன் குடுத்தாரே... இன்ஸ்பெக்டர் ஒருத்தரே, 20,000 ரூபாய் பாக்கி வச்சிருக்காரே... அவங்க கூட, அவரை காப்பாத்தாம விட்டுட்டாங்களே'ன்னு கதறி அழுதிருக்காங்க... விசாரிக்க போன போலீசார், சுவத்துல அடிச்ச பந்தா வந்துட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''வழக்குல சிக்கியும், வசூலை நிறுத்தல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றிய ஆபீஸ்ல ஒரு அதிகாரி இருக்கார்... மனைப்பிரிவு, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு, வீடு, தொழிற்சாலை, குடோன் உள்ளிட்ட கட்டட அனுமதின்னு எல்லாத்துக்கும் பட்டியல் போட்டு வசூல் பண்றார் ஓய்...''லோக்சபா தேர்தல் நடத்தை விதியை கவசமா பயன்படுத்தி, தனிக்காட்டு ராஜாவா வசூல் வேட்டை நடத்தினார்... நிறைய புகார்கள் வரவே, ஏப்ரல் 25ம் தேதி இவரது ஆபீஸ்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினா ஓய்...''அப்ப, ஆபீஸ்ல இருந்து மொத்தம் 1.11 லட்சம் ரூபாயை கைப்பற்றினா... அதுவும் இல்லாம, இறந்து போன சி.எம்.டி.ஏ., பிளானரின் கையெழுத்தை போலியா போட்டு, 2021ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட, கட்டட அனுமதிக்கான ஆவணத்துக்கு அனுமதி வழங்கியது உட்பட பல முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் பண்ணா ஓய்...''இதுக்காக, அதிகாரி மேல வழக்கு பதிவு பண்ணியிருக்கா... வழக்குல சிக்கினாலும், 'மணி' வேட்டையை அதிகாரி தீவிரமா நடத்திண்டு தான் இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 15, 2024 06:50

வழக்குத் தீர்ப்பாகி எத்தனை காலம் உள்ளே இருக்க வேண்டுமோ? குடும்பம் சமாளிக்க இந்த இடைக்காலத்தில் ‘சம்பாதித்து’ வைக்கிறார்


Raghavan
ஜூன் 15, 2024 10:39

தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றுவார்கள். பின்பு அமைச்சருக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்துவிட்டு பழையபடி அதே இடத்துக்கு வந்துவிடுவார்கள் மறுபடியும் வசூல் ஆரம்பம். வழுக்கு நடக்கும் ஒரு 20 வருடங்களுக்கு அதற்குள் சம்பாதிப்பதை சம்பாதித்துவிடுவார்கள். இதெல்லாம் ஜனங்களுக்கு ஒரு கண்துடைப்பு வேலை


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை