| ADDED : ஜன 19, 2024 01:05 AM
புதுடில்லி, மரபணு மாற்றப்பட்ட எண்ணெய் வித்துக்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சமையல் எண்ணெயை உள்நாட்டு தேவைக்காக நாம் ஏற்கனவே அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறோம். 'அப்படி இருக்கையில் அவற்றை பயிரிடுவதால் பாதிப்பு ஏற்படும் என்ற ஆதாரமற்ற அச்சம் தேச நலனுக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.மரபணு மாற்றப்பட்ட எண்ணெய் வித்துக்களை பயிரிட தடை விதிப்பது தொடர்பான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. சமையல் எண்ணெய்
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:நம் நாட்டில் பயன்படுத்தப்படும் 55 - 60 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2020 - 21ம் ஆண்டில், சமையல் எண்ணெயின் தேவை 2.50 கோடி டன்னாக இருந்தது. இதில் 1 கோடி டன் மட்டுமே உள்ளூரில் கிடைத்தது. மீதியுள்ள 54 சதவீத தேவை, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட்டது.இதன் மதிப்பு, 1.15 லட்சம் கோடி ரூபாய். கடந்த 2022 - 23ல் 58 சதவீத சமையல் எண்ணெய் தேவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை நாம் ஏற்கனவே அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். நம் விவசாயத்தில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், இறக்குமதி சார்பை குறைக்கும் அதே வேளையில், புதிய மரபணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தாவர இனப்பெருக்கத் திட்டங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். அச்சம்
இந்த விவகாரத்தில், நிரூபிக்கப்படாத அச்சத்தின் அடிப்படையில் மரபணு மாற்ற பயிர்களுக்கு தடை விதிப்பது, விவசாயிகள், நுகர்வோர் மற்றும் தொழில்துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.