பெ ஞ்சில் அமர்ந்ததுமே, ''பெண் அதிகாரி மீது புகார்கள் குவியுதுல்லா...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சென்னை கோயம்பேடு மகளிர் போலீஸ் நிலையத்தில், ஒரு பெண் அதிகாரி இருந்தாங்க... இவங்களிடம், தன் கணவர் மீது ஒரு பெண் புகார் குடுத்தாங்க வே... ''ஆனா, அந்த பெண்ணின் கணவரிடம் கணிசமான தொகையை வாங்கிய அந்த பெண் அதிகாரி, அவரை வெளிநாடு தப்பிக்க விட்டுட்டாங்க... இது, போலீஸ் கமிஷனர் அருண் காதுக்கு போக, பெண் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு துாக்கி அடிச்சிட்டாரு வே... ''இதுக்கு முன்னாடி அந்த பெண் அதிகாரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்திருக்காங்க... அங்கயும், குற்றவாளிகளுக்கு உடந்தையா செயல்பட்டு, மாமூல் வாங்கி குவிச்சிருக்காங்க... இதை தட்டிக் கேட்ட சிலரை, தமிழக அரசு வழக்கறிஞர் ஒருத்தர் பெயரை சொல்லி மிரட்டி இருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி. ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''முகமது ஜின்னா, தாஹிரா மேடம் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க...'' என கூறி, போனை வைத்த படியே, ''காத்திருக்க வச்சிட்டாரு பா...'' என்றார். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''வர்ற, 14ம் தேதி, திருவண்ணாமலையில், தி.மு.க., இளைஞர் அணியின் மண்டல மாநாடு நடக்க இருக்கு... இதுக்கான ஏற்பாடுகள் பத்தி ஆலோசிக்க, இளைஞர் அணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி, சமீபத்தில் திருவண்ணாமலைக்கு வந்தாரு பா... ''அதுக்கு முதல் நாள், 'வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த, தி.மு.க., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் எல்லாம், திருவண்ணாமலை, தி.மு.க., அலுவலகத்துக்கு நாளைக்கு காலை, 9:00 மணிக்கே வந்துடணும்'னு, உதயநிதியின் உதவியாளர் அழைப்பு விடுத்திருக்காரு... ''மறுநாள் எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்துட்டாங்க... ஆனா உதயநிதி, 11:00 மணிக்கு தான் வந்திருக்காரு... 'நம்மை வெட்டியா ரெண்டு மணி நேரம் காத்திருக்க வச்சிட்டாரே'ன்னு, உதயநிதி மீது அமைச்சர்கள் பலரும் கடுப்புல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''அதிகாரிக்கு எதிரா போர்க்கொடி துாக்கியிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னையில், நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலுவலகம் இருக்கோல்லியோ... இதன் கட்டுப்பாட்டில், 24 மாநகராட்சிகளும், 144 நகராட்சி அலுவலகங்களும் இருக்கு ஓய்... ''இதுல, ஒன்பது மாநகராட்சிகள்ல, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர்களும், 15 மாநகராட்சிகள்ல நகராட்சி நிர்வாகத் துறையைச் சேர்ந்தவாளும், கமிஷனர்களா இருக்கா... நகராட்சிகள்லயும் தனியா கமிஷனர்கள் இருக்கா ஓய்... ''இவா எல்லாம் தினமும் கார்த்தால, 6:00 மணிக்கு, அந்தந்த மாநகராட்சி, நகராட்சி பகுதிகள்ல நடக்கற குப்பை அள்ளும் பணிகளை பார்வையிட்டு, மொபைல் போன்ல படம் எடுத்து, நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிக்கு, 'வாட்ஸாப்'ல அனுப்பணுமாம்... ''அப்படி அனுப்பாம விட்டா, அவா மேல, 'துறை ரீதியான நட வடிக்கை எடுப்பேன்'னு அதிகாரி மிரட்டறார்... இதனால மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் எல்லாம், அதிகாரிக்கு எதிரா போர்க்கொடி துாக்கியிருக்கா... இதனால, 'அந்த அதிகாரியை சீக்கிரமே மாத்திடுவா'ன்னு நகராட்சி நிர்வாகத் துறையில பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. ''மதுசூதனன் வர்றாரு... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.