உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆளுங்கட்சி கூட்டத்துக்கு அரசு நாற்காலிகள்!

ஆளுங்கட்சி கூட்டத்துக்கு அரசு நாற்காலிகள்!

''பதவி இல்லாததால, விண்ணப்பம் தர மறுத்துட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த கட்சியில, யாருக்கு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''பா.ஜ.,வுல இருந்த நடிகை கவுதமியும், பா.ஜ., ஆதரவு அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலியும் சமீபத்துல, பழனிசாமி முன்னிலையில அ.தி.மு.க.,வுல சேர்ந்தாங்களே பா...''இவங்களை, மதுரையின் பிரபல டாக்டரான, முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் தான் கட்சிக்கு அழைச்சிட்டு வந்தாரு... தனக்கு மதுரை தொகுதியை கேட்டு, கட்சி ஆபீஸ்ல விருப்ப மனு கொடுத்த சரவணன், ராமநாதபுரம் தொகுதிக்கு பாத்திமா அலிக்கு ஒரு விருப்ப மனு போட, விண்ணப்பம் கேட்டிருக்காரு பா...''ஆனா, 'பாத்திமா அலி, எதாவது ஒரு பதவியில இருந்தா மட்டும் தான் தேர்தல்ல போட்டியிட முடியும்... அவங்களுக்கு எந்த பதவியும் இல்லாததால, விண்ணப்பம் தர முடியாது'ன்னு தலைமை கழகத்துல மறுத்துட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''போலி டாக்டர்கள் அதிகமாகிட்டாங்கல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''-பெரம்பலுார் மாவட்டத்துல, கிராமங்கள், புறநகர் பகுதிகள்ல, 10, பிளஸ் 2, டிப்ளமோ மட்டும் படிச்ச நிறைய பேர், அலோபதி டாக்டர் மாதிரி நோயாளிகளுக்கு சிகிச்சை தர்றாவ... பெரும்பாலும், மெடிக்கல் ஸ்டோர் வச்சிருக்கிற பலர், ஊசி எல்லாம் போடுதாவ வே...''இன்னும் சிலர் ஹோமியோபதி, சித்தா படிப்பை முடிச்சிட்டு கிராமப்புறங்கள்ல கிளினிக் தொடங்கி நடத்துதாவ... இதுல சிலர், சட்டவிரோதமா கருக்கலைப்புலயும் ஈடுபடுதாவ வே...''ரொம்ப முடியாதவங்களுக்கு வீட்டுக்கே வந்து வைத்தியம் பார்க்கிறதாலும், கம்மியா பீஸ் வாங்குறதாலும், கிராம மக்கள் இவங்களை தேடி போறாவ... போலி டாக்டர்கள் தர்ற அதிகமான, 'டோஸ்' வலி நிவாரணி மருந்துகளால, நோயாளிகள் சீக்கிரமே குணமாயிடுதாவ வே...''ஆனாலும், அதிகப்படியான வலி நிவாரணி மருந்துகளால கிட்னி பெயிலியர், பக்கவாதம் போன்ற நோய்கள் வந்துடுது... இதை எல்லாம் கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதார துறை அதிகாரிகள், போலீசார் மெத்தனமா இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''கட்சி மீட்டிங்குக்கு அரசு பர்னிச்சர்களை எடுத்துண்டு போயிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சிவகங்கையில், சமீபத்துல தி.மு.க., சார்புல பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம், நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்துது... இதுல, அமைச்சர்கள் மகேஷ், பெரியகருப்பன் சிறப்பு விருந்தினரா கலந்துண்டா ஓய்...''விழா மேடையில், சிறப்பு விருந்தினர்களுக்கு போட்டிருந்த நாற்காலிகள் எல்லாமே, சிவகங்கை நகராட்சி கூட்ட அரங்கத்துல, கவுன்சிலர்கள் அமரும் நாற்காலிகள்...''இது, மறுநாள் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு தெரியவர, அவா ஆவேசமாகி, கமிஷனரை முற்றுகையிட்டு பிரச்னை பண்ணியிருக்கா ஓய்...''அவரோ, 'எனக்கு எதுவும் தெரியாதுங்க... நான் அப்ப ஆபீஸ்லயே இல்ல... நீங்க சேர்மனை தான் கேட்கணும்... தயவு செய்து விஷயத்தை பெருசாக்காதேள்'னு கவுன்சிலர்களிடம் மன்றாடியதால, அவாளும் திரும்பி போயிட்டா ஓய்...'' என முடித்தார்,குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை