உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மலை மாவட்டத்தில் மானாவாரியாக நடக்கும் கடத்தல்!

மலை மாவட்டத்தில் மானாவாரியாக நடக்கும் கடத்தல்!

“நீண்ட விடுப்புல போயிட்டாங்க வே...” என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறை அதிகாரியை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.''தமிழக அரசின் மீன்வளத் துறை பெண் இயக்குனர், 40 நாள் லீவ்ல போயிட்டாங்க... வழக்கமா, உயர் அதிகாரிகள் நீண்ட விடுப்புல போறப்ப, பொறுப்பு அதிகாரியை நியமிப்பாங்க வே...''ஆனா, 40 நாள் லீவ்ல போன இயக்குனருக்கு பதிலா, பொறுப்பா யாரையும் நியமிக்கல... இதனால, துறையில நிறைய பைல்கள் தேங்கிட்டு... எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாம அதிகாரிகளும் தவிக்காவ வே...''அதுவும் இல்லாம, இயக்குனருக்கு அடுத்த நிலையில் இருக்கிற அதிகாரிகள், ஆபீசுக்கு வர்ற மீனவர்களை சந்திக்க மறுத்துடுதாங்க... இதனால, குறைகளை தெரிவிக்க போறவங்க ஏமாற்றத்தோட திரும்புதாங்க வே...” என்றார், அண்ணாச்சி.''ரீல்ஸ் மோகத்துக்கு அளவில்லாம போயிடுத்து ஓய்...” என, திடீரென அலுத்துக் கொண்டார் குப்பண்ணா.''ஆமாமா... விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மதுரை கள்ளழகர் கோவில், 108 வைணவ தலங்கள்ல ஒண்ணா இருக்கோல்லியோ... சமீபகாலமா, அழகர் மலை பகுதியில் புதுமண தம்பதியர், 'போட்டோஷூட்' எடுக்கறா ஓய்...''சமீபத்துல ஒரு ஜோடி, அழகர் கோவில் கோபுர பின்னணியில அமர்ந்து, டம்ளர்ல மதுபானத்தையும், தண்ணீரையும் ஊத்தி மிக்ஸ் பண்றா மாதிரி ரீல்ஸ் எடுத்து, சோஷியல் மீடியாக்கள்ல வெளியிட்டா... ''இதை பார்த்து, ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு பதிவுகளை போட, அந்த ரீல்சை ஜோடி நீக்கிடுத்து... ஆனாலும், 'அவாளை சும்மா விடப்டாது'ன்னு எல்லாரும் கொந்தளிக்கறதால, அவா யார்னு போலீசார் விசாரணை நடத்திண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.''ஆம்புலன்ஸ்கள்ல ஈசியா கடத்திட்டு வந்துடுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''நீலகிரி மாவட்டத்துல சில தனியார் ஆம்புலன்ஸ்கள்ல குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திட்டு வந்துடுறாங்க... குன்னுார்ல இருந்து சில குறிப்பிட்ட ஆம்புலன்ஸ்கள், பெங்களூரு மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி போயிட்டு வருதுங்க...''இப்படி ஒருமுறை போனா, 1 லட்சம் ரூபாய்க்கு, 'சரக்கு' ஏத்திட்டு வந்து, மலை மாவட்டத்துல, 5 லட்சம் ரூபாய்க்கு வித்துடுறாங்க... ''இப்படி வர்றவங்க, வருவாய் துறையினரால் கடந்த காலங்கள்ல வழங்கப்பட்ட தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டைகளை காட்டி, சோதனை சாவடிகளை 'ஈசி'யா கடந்து வந்துடுறாங்க...''அதேமாதிரி, கூடலுார் வன கோட்டத்துல, 'ஆபத்தான மரங்கள்' என்ற போர்வையில, நல்ல மரங்களையும் வெட்டி கேரளாவுக்கு கடத்திட்டு போறாங்க... அதாவது, தோட்டங்கள், சாலை, குடியிருப்புகளை ஒட்டி கீழே விழும் நிலையில் இருக்கிற மரங்களை வெட்ட, முறைப்படி சிலர் அனுமதி வாங்குறாங்க...''அப்புறமா, வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆசியுடன், நல்ல நிலையில் இருக்கிற அயனி, பலா, தேக்கு, சில்வர் ஓக், கற்பூர மரங்களையும் சேர்த்து வெட்டிடுறாங்க... ''இதை தி.மு.க., - அ.தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் இருவர் கூட்டணி சேர்ந்து செய்றதால, சோதனை சாவடிகள்ல பெரிய அளவுல கெடுபிடி காட்டுறது இல்லைங்க... வெட்டப்பட்ட மரங்கள், கேரளாவுக்கு சுலபமா போயிடுதுங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 28, 2025 06:19

அந்த 40 நாளில் யாராவது உட்கார்ந்துகொண்டு அதன் மூலம் வரவேண்டிய ‘வருமானத்துக்கு’ வேட்டு வைத்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை முத்தம்மா போலிருக்கிறது