உள்ளூர் செய்திகள்

டீ கடை பெஞ்சு

கலைந்து போன மேயர் கனவு: 'மாஜி' மந்திரி புலம்பல்!

''மேயர் கனவும் கலைஞ்சு போச்சேன்னு, முன்னாள் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் புலம்பிட்டு இருக்காங்க பா...!'' என, முதல் ஆளாக பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''கோவையில, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி, போன தேர்தல்ல கவுன்சிலராகி, மண்டலத் தலைவரானாரு பா... மகனை எப்படியாவது எம்.எல்.ஏ.,வாக்கணும்னு, அப்பா முயற்சி செஞ்சார்... அது முடியலை... சரி, மேயராவது ஆக்கலாம்னு நினைச்சிருந்தார்...''ஆனா, அப்பா, மகன் ரெண்டு பேருமே, ஜெயில்ல இருக்காங்க... மாவட்டச் செயலரான பழனிச்சாமி இல்லாமலே, வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடக்குது... இதுல, பாரி எப்படி தேர்தல்ல நிக்க முடியும்...? அதனால, மேயர் கனவும் கலைஞ்சு போச்சேன்னு, பழனிச்சாமியும், அவரது ஆதரவாளர்களும் புலம்பறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''கெஸ்ட் அவுஸ் கட்டறதுக்கு அமைச்சர் ரொம்ப ஆர்வமா இருக்காராம்... ஆனா, அதிகாரிகள் அதிருப்தி தெரிவிச்சிருக்காங்க வே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறை ஓய்...?'' என்று விசாரித்தார் குப்பண்ணா.''மணிமுத்தாறு அணைக்கு மேல இருக்கற அப்பர் கோதையாறுல, வனத் துறைக்குச் சொந்தமா, 'கெஸ்ட் அவுஸ்' கட்டறதுக்கு, அந்த துறை அமைச்சர் விருப்பம் தெரிவிச்சிருக்காரு வே... ஆனா, அந்தப் பகுதி, அடர்ந்த காட்டுப் பகுதியா இருக்காம்... அங்க, புலிகள் நடமாட்டம் அதிகமா இருக்குமாம்... அதனால, அந்தப் பகுதியில எந்தக் கட்டடமும் கட்டக்கூடாதுன்னு விதி இருக்காம்... இதையெல்லாம், அமைச்சர்கிட்ட, அதிகாரிகள் எடுத்துச் சொல்லிருக்காவ...'' என்றார் அண்ணாச்சி.''அதை, அமைச்சர் ஏத்துண்டாரா ஓய்...?'' என்று கேட்டார் குப்பண்ணா.''தெரியலை வே... ஆனா, 'அந்தப் பகுதியில இருக்கற மின் வாரிய கெஸ்ட் அவுசை பயன்படுத்திக்கலாம்... புதுசா விடுதி கட்டறது தேவையில்லாதது... அதோட, 'கெஸ்ட் அவுஸ்' கட்ட முயற்சி எடுத்தாலும், மத்திய சுற்றுச்சூழல் துறை கேட்கற கேள்விளுக்கு பதில் சொல்ல முடியாது'ன்னு, அதிகாரிகள் அதிருப்தி தெரிவிச்சிருக்காவ...'' என்றார் அண்ணாச்சி.''நானும் ஒரு வனத்துறை மேட்டர் சொல்லட்டுமாங்க...'' என, கேட்டபடி, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.

''தாராளமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''இருபத்தைஞ்சு ரேஞ்சர்களுக்கு, உதவி வனப் பாதுகாவலர் பதவி உயர்வு வழங்க வேண்டியிருக்குங்க... இதுல, 19 பேரை மட்டும் சென்னைக்கு வரவழைச்சிருக்காங்க... அவங்ககிட்ட, பதவி உயர்வு சம்பந்தமா, தனித்தனியா சந்திச்சு, 'ஏதோ' பேசப் போறாங்களாம்...''அந்த பேச்சுவார்த்தையில வெற்றி பெற்றால் தான், பதவி உயர்வு ஆர்டர் கிடைக்குமாமுங்க...'' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி நடையைக் கட்ட, மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை