விபத்து ஏற்படுத்திய கார் உரிமையாளரே பாதித்த நபருக்கு இழப்பீடு தர உத்தரவு
சென்னை, விபத்து இழப்பீடு வழக்கில், போலி இன்சூரன்ஸ் பாலிசி தாக்கல் செய்ததால், 2.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, பாதிக்கப்பட்ட நபருக்கு கார் உரிமையாளரே செலுத்தும்படி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. முகப்பேரைச் சேர்ந்தவர் காஜா செஞ்சு பிரகாஷ், 20. கடந்த 2022, செப்., 8ல், அம்பத்துார் எஸ்டேட் அருகே, தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த 'மாருதி' கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில், காஜா செஞ்சு பிரகாஷ், இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். படுகாயமடைந்த தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில், பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முத்து முருகன், ''விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் பரமசிவம் தாக்கல் செய்த வாகனத்தின் இன்சூரன்ஸ் பாலிசி, இருசக்கர வாகனத்துக்கு வழங்கப்பட்டது. அவர் போலி இன்சூரன்ஸ் பாலிசியை தாக்கல் செய்ததால், இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்க தேவையில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட மனுதாரர் பிரகாஷுக்கு 2.60 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, கார் உரிமையாளர் பரமசிவம் வழங்க வேண்டும்,'' என தீர்ப்பளித்தார்.