உள்ளூர் செய்திகள்

தாமதம் தந்த பரிசு!

மதுரை மாவட்டம், திருநகர், மு.மு.உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 11ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.சதாசிவ தேவர், மிகவும் கண்டிப்பானவர். என், கிராமம் தொலை துாரத்தில் இருந்ததால், அக்கா வீட்டில் தங்கி படித்து வந்தேன்.அரையாண்டு விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டேன். பள்ளி திறந்த அன்று, 15 நிமிடம் தாமதமாக வந்தேன். இறைவணக்க கூட்டம் முடிந்திருந்தது. பள்ளி நுழைவு வாயிலில் தயங்கி நின்ற என்னை விசாரித்தார் தலைமை ஆசிரியர். 'பேருந்தை தவறவிட்டதால் தாமதமாகிவிட்டது...' என கூறி அழுதேன்.என்னை உற்று நோக்கியபடி, 'குறிப்பிட்ட நேரத்திற்கு முன் சென்று, காத்திருந்து பேருந்தில் ஊருக்கு போயிருப்பாய். திரையரங்கில் பலமணிநேரம் வெயிலில் காத்திருந்து படம் பார்த்திருப்பாய்; அதுபோல, பள்ளிக்கு வருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டாமா...' என்றார். அந்த அறிவுரை, நெஞ்சில் ஆழமாக பதிந்தது. நன்றாக படித்து, மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பணியின் போது, ஒரு நாள் கூட, அலுவலகத்துக்கு தாமதமாக சென்றதில்லை.இப்போது, என் வயது, 74; பள்ளியை கடக்கும் போதெல்லாம், தலைமை ஆசிரியரின் அன்றைய அறிவுரையை எண்ணி வணங்க தவறுவதில்லை.- ப.பிரணவம், விருதுநகர்.தொடர்புக்கு: 95855 50365


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !