அலையை ஆற்றும் காடு!
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை கிராமம் அருகே உள்ளது பிச்சாவரம். வங்கக் கடலை ஒட்டிய அமைதியான பகுதி. சிறிய தீவுகள் கூட்டமாக உள்ளன. இவற்றில் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி என்ற மாங்குரோவ் காடு, 2,800 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த பகுதியில் வளரும் மரங்கள் கடல் அலையை ஆற்றுப்படுத்தி, கரையை காப்பாற்றுகின்றன. இங்கு கடலை ஒட்டி ஒரே மாதிரி, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள் அமைந்துள்ளன. இது வியப்பை ஏற்படுத்தும். இந்த கடலோர காட்டில், 20 வகை சுரப்புன்னை தாவரங்கள் அடர்ந்துள்ளன. இவற்றுடன், 18 வகை மூலிகை தாவரங்களும் வளர்ந்துள்ளன. சுரபுன்னை மரங்களின் காய் நீண்டு முருங்கைக்காய் போல் காட்சி தரும். அவை, விதையாகி சேற்றில் விழுந்து மரமாக வளரும். தாவரத்தின் பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, மீன்களுக்கு உணவாகும். இதனால், மீன், இறால் அதிக அளவில் கிடைக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை, 177 வகை பறவைகள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. போதிய உணவும், பாதுகாப்பும் கிடைப்பதால் வரத்து அதிகம் உள்ளதாக பறவையியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். பிச்சாவரம்...● சிதம்பரம் நகரில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் உள்ளது● நகர பேருந்தில் குறைந்த கட்டணத்தில் செல்லலாம்● வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க படகு வசதி உண்டு● மோட்டார் படகில், ஆறு பேர் பயணிக்கலாம்● காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை சவாரிக்கு அனுமதி உண்டு. வனப்பகுதி கால்வாய் வழியாக, 45 நிமிடங்களில் படகில் வனத்தைச் சுற்றி வரலாம். துடுப்பு படகிலும் பயணிக்கலாம்; ஒரு படகில், ஐந்து பேர் வரை பயணிக்க அனுமதி உண்டு. படகை பயன்படுத்த வசதி இல்லாதோருக்கு, கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தொலைநோக்கு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, மாங்குரோவ் காட்டின் அழகை ரசிக்கலாம். தமிழக சுற்றுலா துறை சார்பில் உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கையின் அரிய பொக்கிஷம் பிச்சாவரம் அலையாத்தி காடு. அதை போற்றி பாதுகாப்போம். - ராமலிங்கம்