உள்ளூர் செய்திகள்

அஞ்சல் அட்டையா...

சிவகங்கை மாவட்டம், கல்லல் உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியர், போஸ்ட் ஆபிஸ் சென்று, அஞ்சல் அட்டை வாங்கி வர சொன்னார். நானும் சென்று, 'பத்து அஞ்சல் அட்டை கொடுங்கள்...' என்றேன். இதை கேட்ட போஸ்ட் மாஸ்டர் விழித்தார். 'அஞ்சல் அட்டையா... அந்தப் பெயரில் அட்டை இல்லை; யார் வாங்கி வர சொன்னது...' என்றார். ' தமிழாசிரியர்...' என்றேன்.'அவரையே வரச் சொல்...' என்று அனுப்பி விட்டார். ஆசிரியரிடம் விபரம் சொன்னேன். கோபத்துடன் தபால் ஆபிஸ் சென்றவர், 'போஸ்ட் கார்டு' என்று ஆங்கிலத்தில் சொன்னால் தெரியுது, 'அஞ்சல் அட்டை' என்று தமிழில் சொன்னால் தெரியலையா... 'தாய் மொழியை கற்றுக் கொள்ளுங்க; தமிழோடு, ஆங்கிலம் கலந்து பேசுறீங்க... தமிழில் பேசுங்க அல்லது ஆங்கிலத்தில் பேசுங்க... ஆங்கிலம் கலந்து பேசி, தமிழை அவமானப்படுத்தாதீங்க...' என்று, அறிவுரை கூறினார். அவரது அறிவுரைபடி, இன்று வரை, ஆங்கிலம் கலக்காமல், தமிழ் பேசுகிறேன். தாய் மொழியை நாமே மதிக்கவில்லை என்றால் எப்படி!- பி.ஆர்.ராக்கப்பன், சிவகங்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !