உள்ளூர் செய்திகள்

மனதில் ஆறாத வடு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாடு, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 8ம் வகுப்பு படித்தேன்!தமிழ் பாடத்தில், முதல் மதிப்பெண் பெறுவேன். என் அருகே அமர்ந்திருந்த மாணவி, என் விடைத்தாளை வாங்கி, 'நானும், உன்னை மாதிரி தான் எழுதியுள்ளேன்; எனக்கு மட்டும் ஏன், குறைவாக மதிப்பெண் போடுகிறார்...' என்றாள். அது பற்றி, ஆசிரியையிடம் கேட்டாள்.'அடுத்தவர் திறனுடன் ஒப்பிடாதே...' என, ஆசிரியை கூறிய அறிவுரை, அவளுக்குப் பிடிக்கவில்லை.ஒருமுறை வகுப்பை, இரு அணியாக பிரித்த ஆசிரியை, 'போட்டிக்கு போட்டி' என்ற முறையில் கேள்வி கேட்க வைத்தார்.என் அணி சார்பில், அவளிடம் கேள்வி கேட்டேன். அதற்கு பதில் கூற முடியாமல் தடுமாறினாள். எனக்கு பாராட்டு கிடைத்தது, அவளுக்குப் பொறுக்க முடியவில்லை.அதை, அவமானமாக கருதி, வகுப்பு முடிந்து புறப்பட்ட போது, கூர்மையான பென்சிலால், என் உச்சந்தலையில் ஓங்கி குத்தி, ஓடி விட்டாள். தலையில், ரத்தம் கசிந்தது. இதைக் கண்ட மாணவியர், ஆசிரியையிடம் சொல்ல முயன்றனர்; நான் தடுத்துவிட்டேன். அந்த காயத்தால், இரண்டு நாட்கள் காய்ச்சலில் அவதிப்பட்டேன். பள்ளி படிப்பு முடிந்த அன்று, என் கையைப் பற்றி மன்னிப்புக் கேட்டாள். அதன் பின், பிளேடு, கத்தி, அரிவாள்மனை என, கூர்மையாக எதைப் பார்த்தாலும் பயம் வந்துவிடும்.எனக்கு, 56 வயதாகிறது. சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியைக் கூட, மழுங்கலாகத் தான் வைத்துள்ளேன். விருந்தாளிகள் வந்தால், 'கத்தியை கூர்மையாக்கி வை...' என்று அறிவுரை கூறுவர். உடனே, அந்த சம்பவம் நினைவுக்கு வந்து, அமைதியாகி விடுவேன். ஒரு பென்சிலைக் கூட கூர்மையாக சீவ முடியாமல் மனதில் நீங்காத வடுவாகிவிட்டது அந்த சம்பவம்.- டி.இந்துராணி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !