பாரதிதாசன் வரவேற்ற பட்டம்!
பாவேந்தர் பாரதிதாசன் மகாகவி பாரதியாரை குருவாகக் கொண்டு போற்றி மதித்தவர். தனது சொந்தப் பெயரான கனக சுப்புரத்தினம் என்பதையே மாற்றி தன்னை பாரதியின் தாசன் என காட்டிக் கொள்ள 'பாரதிதாசன்' என்றே பெயர் வைத்துக் கொண்டார்.பாரதியாரை விட பாரதிதாசன் சிறந்த கவிஞர் என்ற அபிப்பிராயம் உள்ளவர்கள் உண்டு. அம்மாதிரி அபிப்பிராயம் உள்ள ஒரு பத்திரிகையாளர் அதை ஒரு சமயம் பத்திரிகையிலும் எழுதி விட்டார். பாரதிதாசன் அன்பர்களுக்கு அதைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது. அதைப் பாரதிதாசனிடம் வந்து காட்டினர்.ஆனால், பாரதிதாசனோ அதில் மகிழ்ச்சி அடையவில்லை. பாரதியார் மகாகவி. அவரை விடச் சிறந்தவன் என்று எழுதக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.பாரதிதாசனுக்கு ஓர் அமைப்பு, 'உலக மகாகவி' என்ற பட்டத்தைத் தந்தது. அப்போது சிலர் பாரதிதாசனை அணுகி, 'உங்கள் குருவான பாரதியாருக்கு கிடைக்காத பட்டம் தங்களுக்குக் கிடைத்திருக்கிறதே! இதுப்பற்றி தங்கள் கருத்தென்ன?' என்று கேட்டனர்.அதற்கு பாரதிதாசனோ, 'உலக மகாகவி பாரதிதாசன் என்று என்னைக் குறிப்பிடும் பொழுது, உலக மகாகவி பாரதி அவருக்கு நான் தாசன் என்றுதானே இதில் அர்த்தம் வருகிறது. அதனால், எனக்கு இந்தப் பட்டத்தில் ஆட்சேபம் ஏதும் இல்லை' என்று சொல்லிச் சிரித்தார்.