உள்ளூர் செய்திகள்

அதிசய ஓவியம்!

முதுமலை கிராமத்தில், ஜெயன் என்ற சிறுவன், வசித்து வந்தான். நற்குணங்கள் பெற்றவன். பெற்றோரும், மற்றோரும் பாராட்டும் வகையில் வாழ்ந்தான்.ஒரு சமயம் -மழை கொட்டித் தீர்த்தது; கிராமமே, வெள்ள காடாக காட்சியளித்தது. பாதி கிராமம் அழிந்து விட்டது. தொடர்ந்து வந்த நோயால், மீதி கிராமமும் அழிந்து கொண்டிருந்தது.பெற்றோரை இழந்த ஜெயன், எங்காவது போய் பிழைக்க முடிவு செய்தான். சிறிது தொலைவில் பெரியபாளையம் என்ற கிராமத்துக்கு சென்றான்.அந்த கிராம மக்களை, 'பெரிய மனம் படைத்தவர்கள்' என்று கூறுவர். அங்கு சென்ற ஜெயனை, அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அவனுக்கு ஆறுதல் கூறி, தைரியம் ஊட்டினர். சாப்பாடு தந்து, பாதுகாத்தனர். அதனால், ஊராரின் மாடுகளை மேய்த்து காலந்தள்ளி வந்தான்.அவன் மனதில், ஓவியனாக வேண்டும் என்ற ஆசை வந்தது!சிறுவயதிலே, அந்த ஆசை இருந்தது. எல்லாக் குழந்தைகளும் விளையாடியபடி இருப்பர். அவனோ, தரையில் அமர்ந்து, குச்சியால், மணலில் அப்படியும், இப்படியும் கோடுகள் போட்டு கொண்டிருப்பான். குழந்தைப் பருவ ஆசை தான், ஜெயன் மனதில் தலை துாக்கியது. மாடுகளை மேய விட்டு, மர நிழலில், மணல் பரப்பி, ஓவியம் வரையக் கற்றுக் கொண்டான். மணல் பரப்பில், கோழிக்குஞ்சு ஒன்றை வரைந்தான். அது, உயிரோவியம் போல் இருந்தது. வானத்தில் பறந்த கழுகு, அந்த ஓவியத்தைப் பார்த்ததும், உயிருள்ள கோழிக் குஞ்சு என, நினைத்து, துாக்கிச் செல்ல வட்டமிட்டது.சுய முயற்சியால், உயிரோவியங்களை வரைந்தான் ஜெயன். ஒரு துாரிகை வாங்க முடியவில்லையே என்ற கவலை அவனிடம் இருந்தது.அன்று பவுர்ணமி இரவு -ஜெயன் அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தான். அவன் கனவில், தேவதை தோன்றி, 'உன் முயற்சியை பாராட்டுகிறேன்; இதோ, அழகான துாரிகை. இதை பயன்படுத்தி, பெரும் சாதனை படைக்க முயற்சி செய். இது சாதாரண துாரிகை அல்ல... அதிசய துாரிகை...' என்று கூறி மறைந்தது. கண் விழித்த போது, ஜெயன் கையில், கனவில் கண்ட அதிசய துாரிகை இருந்தது. அவனால் நம்பவே முடியவில்லை. தேவதைக்கு நன்றி கூறினான். ஓய்வு நேரத்தில், துாரிகையால் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தான்.ஒரு நாள் - மணல் பரப்பில், ஒரு பறவையை வரைந்தான். வரைந்து முடித்ததுமே, அது உயிர் பெற்று, சிறகுகளை அசைத்து வானில் பறந்தது. பின், குளக்கரைக்குச் சென்றான். அங்குள்ள மணல் பரப்பில், மீன் வரைந்தான். அது, உயிர் பெற்று, துள்ளிக் குதித்து, குளத்தில் விழுந்து நீந்தியது. அக்காட்சி, ஜெயனை, மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றது. அதிசய துாரிகையால், எருமை, கலப்பை போன்றவற்றை வரைந்து, அவை நிஜபொருளானதும், கிராம மக்களுக்கு வழங்கினான். அதனால், ஏழை எளிய மக்கள் ஜெயனை, தெய்வமாக கருதினர். பேரும், புகழும் பரவியது.அந்த ஊரில், மிராசுதார் ஒருவர் இருந்தார். அவரின் செல்வாக்கு, நாளுக்கு நாள் குறையத் துவங்கியது. அதற்கு காரணம் ஜெயன் என, எண்ணிய மிராசுதார் அவனை, வீட்டில் சிறை வைத்தார்.சில தினங்களில் தப்பிய ஜெயன், தொலை துார கிராமத்துக்குச் சென்றான். அங்கு, ஒரு வீட்டில் தங்கி, முழுமை பெறாத ஓவியங்களை வரைந்து, சொற்ப விலைக்கு விற்றான்.குறையுள்ள ஓவியங்கள் உயிர் பெறாது என்பது அவனுக்கு தெரியும்.ஒரு நாள் - ஒரு கண் உள்ள சிட்டுக் குருவியை, ஓவியமாக தீட்டினான். அதை காண, ஊர் மக்கள் திரண்டிருந்தனர்.சிட்டுக் குருவியை, ஓவியமாக தீட்டிக்கொண்டிருந்த போது, துாரிகையை உதறினான்; அப்போது, குருவியின் இன்னொரு கண் இருக்க வேண்டிய இடத்தில் மை பட்டு, கண்களாக மாறி விட்டன.அடுத்த நிமிடம், அந்த சிட்டுக் குருவி உயிர் பெற்று எழுந்து பறந்தது. இதை பார்த்தவர்கள், அதிசயத்தில் ஆழ்ந்தனர்.ஜெயன் கையில் உள்ள அதிசயத் துாரிகை, அவன் வரையும் ஓவியங்கள் பற்றி, அந்நாட்டு அரசனிடம் எடுத்துரைத்தனர். அரசனோ, கொடுமைக் காரன், பேராசையின் மறுவடிவம்.மக்களைக் கசக்கிப் பிழிவதில், கை தேர்ந்தவன். அவன், ஏவல் ஆட்களை அனுப்பி, ஜெயனை பிடித்து சிறையில் அடைத்தான். அதிசய துாரிகையையும் பறித்துக் கொண்டான். பல இடங்களில் இருந்து ஓவியர்களை வரவழைத்து, அந்த துாரிகையால் கோட்டை, யானை, குதிரை சேனைகளை ஓவியமாக வரைய செய்தான்.அவை எல்லாம், உயிருடன் வந்தால், தன்னை யாரும் வெற்றி பெற முடியாது என, எண்ணி அவ்வாறு செய்தான் அரசன்.அவன் பேராசை நிறைவேறவில்லை; ஓவியங்கள் உயிர் பெறவில்லை. அரசனுக்கு சினம் வந்து, ஜெயன் தலையை வெட்டும்படி உத்தரவிட்டான். இந்த ஆத்திரச் செயலைக் கண்ட மந்திரிகள், பொறுமையாக இருக்கும்படி அரசனைக் கேட்டனர்.'நாடாளும் அரசனை சிறுவன் ஏமாற்றுவதா... மனம் பதறுகிறது அமைச்சர்களே...' என்று, அவையில் கொட்டி தீர்த்தான் அரசன்.'இது, அதிசயத் துாரிகை என்பதில் ஐயம் இல்லை; ஆனால், இந்த துாரிகை, அந்த சிறுவனிடம் மட்டுமே, சக்தி பெறுகிறது. எனவே, அவனுக்குப் பொருளாசை காட்டி, ஓவியங்களை வரையச் சொல்வது தான் பொருத்தமானது. அப்படி செய்தால் தான், நீங்கள் நினைத்தது நடக்கும்...' என்றனர் அமைச்சர்கள்.ஆலோசனையை ஏற்று, ஜெயனை, அரண்மனைக்கு அழைத்து, நன்கு உபசரித்தான் அரசன். தன் விருப்பத்தையும் கூறினான். அதிசய துாரிகையை திரும்ப பெற விரும்பிய ஜெயன், அரசன் சொற்படி கேட்பதாக நடித்தான்.ஒரு பணம் காய்க்கும் மரத்தை வரையும்படி கூறினான் அரசன். ஜெயனோ, நீலவண்ணக் கடலை வரைந்தான்.'யார் உன்னைக் கடல் வரையும்படி கேட்டது; பணம் காய்க்கும் மரத்தை தானே வரைய சொன்னேன்...' என்றான் அரசன்.'சற்று பொறுங்கள் அரசே...' என்று கூறி, கடல் நடுவே, ஒரு தீவையும், அதன் நடுவே பணம் காய்க்கும் மரத்தையும் வரைந்தான் ஜெயன். 'அரசே பாருங்கள்... நீங்கள் கேட்ட பணம் காய்க்கும் மரம்...' என்று கூறினான் ஜெயன்.'நான் அங்கே எப்படி போக முடியும்; அதற்கு ஒரு படகை வரைந்து கொடு...' என்று கேட்டான் அரசன்.மிகப் பெரிய படகை வரைந்தான்; அதில், அரசன், அரசி, மந்திரிகள் ஏறினர்; உடனே, காற்றை வரைந்தான் ஜெயன்; படகு மெதுவாக அசைந்து புறப்பட்டது.மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது அரசனும், அவரது பட்டாளமும். 'படகு மெதுவாகப் போகிறதே... வேகமாக போகட்டும்...' என்றான் அரசன்.ஜெயன், புயல் காற்றை வரைந்தான். அது சூறாவளியாக வீசியது; படகு திசை மாறியது; மழை அதிகரித்து, படகுக்குள் நீர் புகுந்தது.'போதும்... போதும்... நிறுத்து...' என்று கத்தினான் அரசன்.'அரசே... இனி எதுவும் செய்ய முடியாது; விதி விட்ட வழி அவ்வளவு தான்...' என்று தீர்க்கமாகச் கூறினான் ஜெயன்.சூறாவளியால் படகு கவிழ்ந்து, அனைவரும் மூழ்கி இறந்தனர்.அரசன் இறந்துவிட்டதால், ஜெயனை மன்னராக்கி மகிழ்ந்தனர் அந்த நாட்டு மக்கள்.குட்டீஸ்... சுயநலமின்றி, நிதானமாக வாழ்ந்தால் உயர்ந்த பதவிகள் தேடிவரும்.- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !