உள்ளூர் செய்திகள்

அசட்டு சர்மா

தாமரைக்குளம் என்னும் ஊரியில் சர்மா என்பவன் இருந்தான். அவன் மிகவும் அசடு. அவன் ஒரு தாசில்தார் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். தாசில்தார் அலுவலகம் சற்று தொலைவில்தான் இருந்தது. ஒருநாள்-தாசில்தார் வீட்டில் வைக்கோல் போர் பற்றி எரிந்தது.தாசில்தார் மனைவி, ''டேய் சர்மா வைக்கோல் போர் பற்றி எரிகிறது என்று சொல்லி அய்யாவை அழைத்து வா,'' என்றாள்.அவனும் அலுவலகம் சென்றான். தாசில்தார் வேலையில் கண்ணும், கருத்துமாக இருந்தார்.சர்மா அரை மணி நேரம் சென்றபின், ''ஐயா!'' என்று கூப்பிட்டான்.''என்னடா!'' என தாசில்தார் கேட்டார்.''அது ஒண்ணுமில்லைங்க. வைக்க போர் பத்திக்கிட்டு எரியுதாம், அம்மா சொல்லச் சொன்னாங்க,'' என்றான்.''ஏண்டா, அதை முன்னாடியே சொல்லக் கூடாதா? இப்படி சாவகாசமாக வந்து சொல்ற. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம், தலையிலே அடித்துக் கொண்டு பதட்டத்தோடு சொல்லணும்,'' என்று கோபத்துடன் சொன்னார் தாசில்தார்.''இனி அப்படியே செய்கிறேன்,'' என்றான். ஆனால், இதே தவறை சர்மா மறுபடியும் செய்தான்.ஒருமுறை தாசில்தார் அம்மா இறந்து விட்டார். இதை தாசில்தார் மனைவி சர்மாவிடம் சொல்லி, உடனே அழைத்துவரச் சொன்னாள். இவன் போய் தாசில்தாரிடம் சாவகாசமாகச் சொன்னான்.''இதை இப்படி சொல்லக் கூடாதுடா. தலையிலே அடித்துக் கொண்டு அழுதுகொண்டே சொல்லணும்,'' என்று தாசில்தார் சொன்னார்.''இனி அப்படியே செய்கிறேன்,'' என்றான்.அடுத்த தடவை அவர்கள் வீட்டுப் பெண்ணை, பெண் பார்ப்பதற்காக ஊரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.''டேய் அய்யாவிடம் போய் சொல்லி அய்யாவை அழைத்துக் கொண்டு வா,'' என்று தாசில்தார் வீட்டு அம்மா சொன்னாள்.அசட்டு சர்மா, தாசில்தார் அலுவலகம் சென்றான். முக்கியமான மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அசட்டு சர்மா, 'ஓ' என்று அழுதுகொண்டு தலையிலும், வாயிலும் அடித்துக் கொண்டு வந்தான்.தாசில்தார் பயந்துபோய், ''என்ன... யாருக்கு என்ன ஆச்சு?'' என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.''ஐயோ மாப்பிள்ளை வீட்டிலிருந்து நம்ம தேவிகாவை பொண்ணு பார்க்க வந்துட்டாங்களே,'' என்று சொன்னான்.''அட, அசடே, அந்த விஷயத்தை சந்தனம், புஷ்பம் எல்லாம் கொண்டு வந்து சந்தோஷமாகச் சொல்ல வேண்டும்,'' என்றார்.''இனி அப்படியே செய்கிறேன்!'' என்றான் சர்மா.அடுத்த தடவை, அவர்கள் வீட்டில் பசு மாடு செத்துப் போய்விட்டது. ''டேய் சர்மா பசுமாடு செத்துப் போச்சுன்னு அய்யாவிடம் சொல்லி விட்டு வா,'' என்றாள் தாசில்தார் மனைவி.''அம்மா, கொஞ்சம் காசு கொடுங்கள்,'' எனக் கேட்டு தேங்காயும், புஷ்பமும், கல்கண்டும் வாங்கிக் கொண்டு தாசில்தாரிடம் போனான். எல்லாருக்கும் புஷ்பம், சந்தனம், கல்கண்டு கொடுத்தான்.''தாசில்தார் சார், உங்கள் வீட்டிலே என்ன விசேஷம்?'' என்றனர்.தாசில்தார் சந்தோஷமாக சர்மாவிடம், ''என்னடா விசேஷம்?'' எனக் கேட்டார்.''அதுவா, நம்ம வீட்டுப் பசுமாடு செத்துப் போய்விட்டது,'' என்றான்.நண்பர்கள், ''இடி, இடி,'' எனச் சிரித்தனர். ''நல்ல வேலைக்காரன் உங்களுக்கு?'' என்று அனைவரும் நகைத்தனர்.தாசில்தாருக்கு வந்ததே கோபம், இனி, ஒரு நிமிடம் கூட இங்கு இருக்கக்கூடாது எனச் சொல்லி சர்மாவை வேலையை விட்டே துரத்தி விட்டார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !