அமெரிகோ வெஸ்பூஸி!
அமெரிக்காவுக்கு, கொலம்பியா என்று தான் பெயரிட்டிருக்க வேண்டும். கொலம்பஸ் தான், முதன் முதலில், அந்த புதிய உலகத்தை கண்டார். அவருக்கு, சாமர்த்தியம் போதாதது; வாய்ப்பந்தல் போடத் தெரியாது. இந்த குணங்கள் எல்லாம் வெஸ்பூஸியிடம் இருந்தன. கொலம்பஸ் பட்ட பாட்டிற்கெல்லாம், பலன் அனுபவித்து சுகப்பட்டார் அமெரிகோ வெஸ்பூஸி!இவர் யார்...கொலம்பஸ், மேற்கொண்ட கடல் பயணத்துக்கு, வேண்டிய சரக்கை சேகரித்துக் கொடுத்த வியாபாரி.'நாமும், கடல் பயணம் மேற்கொண்டால் என்ன...' என்ற ஆசையை வளர்த்துக் கொண்டவர்.அட்லான்டிக் பெருங்கடலின் மறுபக்கத்தில், தான் கண்ட நிலப்பரப்பு, இந்தியா என்று நம்பினார் கொலம்பஸ். ஏனென்றால், அவரது கடல் பயணம், இந்தியாவுக்கு, புதிய கடல் மார்க்கம் காண வேண்டும் என்பது தான். அவர் நினைவெல்லாம், இந்தியாவாகவே இருந்தது. இதனால், தான் கண்ட புதிய நிலப்பரப்பை, இந்தியா என்றே எண்ணினார். அங்கு வசித்த மக்களை, இந்தியர் என்று நம்பினார். பல காரணகாரிய விவாதங்களில் ஈடுபட்டார். மகத்தான கடல் பயணத்தில், வெற்றி கண்டாலும், இவரது கணிப்பு தவறு என, நிரூபிக்கப் பட்டது. அதை எதிர்த்து தடாலடியாக, வாதாடும் திறமை கொலம்பசுக்கு இல்லை. இவருக்காகப் பரிந்து பேச, ராணி இஸபெல்லாவும் இல்லை. இவை, வெஸ்பூஸிக்கு சாதகமாயின. தன் பெயரையே, புதிய உலகுக்கு சூட்டும்படி செய்து விட்டார். இன்றைய அரசியல்வாதிகளின் சாமர்த்தியம், அன்றே, அமெரிகோ வெஸ்பூஸியிடமிருந்து!கொலம்பஸ், கடல் பயணத்தை முடித்து, திரும்பிய சில ஆண்டுகளுக்கு பின், வெஸ்பூஸி, மேற்கு நோக்கி, கடல் பயணம் மேற்கொண்டார். கொலம்பஸ் சென்ற பாதையிலேயே, செல்ல முயன்றார். ஆனால், தோல்வி ஏற்பட்டது. தென்அமெரிக்காவில் உள்ள வெனிசுலா பகுதியில் கரையிறங்கினார். கொலம்பஸ் காலடி பதித்த, அதே கண்டத்தில் தான், கால் பதிக்கிறோம் என்பதை, அப்போது வெஸ்பூஸி அறியவில்லை. பயணத்தை முடித்த அவர், நாடு திரும்பியதும், புதிய நிலப்பகுதியை கண்டு வந்திருப்பதாக தம்பட்டம் அடித்தார். தான் கண்ட நிலப்பரப்பை, புதிய உலகம் என்று வர்ணித்தார். அமெரிக்க கண்டத்தை, புதிய உலகம் என்று அழைத்ததும் இவர்தான்.'வெஸ்பூஸியின் கூற்று தவறு' என்றாகி இருக்க வேண்டும். ஆனால், புதிய உலகில், சாகசங்கள் என்று, பல கற்பனைச் செய்திகளை, கண், காது, மூக்கு வைத்து அபாரமாக கதை அளந்தார், வெஸ்பூஸி.கொலம்பசுக்கு கிடைக்க வேண்டிய புகழும், பெருமையும் இவருக்குப் போய்ச் சேர்ந்தன.வெஸ்பூஸியின் சாகசக் கதைகளால் கவரப்பட்ட பலர், அவரை ஹீரோவாக மதித்தனர். எனவே, புதிய பூமிக்கு வெஸ்பூஸியின் முதல் பெயரான அமெரிகோவையே, 'அமெரிக்கா' என்று வைப்பதென முடிவு செய்தனர். அழியாப் புகழை தட்டிப் போனார் அமெரிகோ வெஸ்பூஸி! ஆனால், நிஜமாகவே அமெரிக்காவை முதலில் கண்ட கொலம்பஸ், கவனிப்பாரின்றி வறுமையில் உயரிழந்தார்; வெஸ்பூஸி, செல்வச்சீமானாக, சுகபோக வாழ்வில் சுகித்திருந்தார்!