உள்ளூர் செய்திகள்

கலைக்கண்!

கடைத் தெருவில் நடந்து கொண்டிருந்தார் சிற்பி. ஒரு கடை முன் கனத்த பாறாங்கல் ஒன்றை பார்த்தார். பெரிய புதையலைக் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. கடை உரிமையாளரிடம், 'ஐயா... இந்த கல் தேவையில்லை என்றால் நான் எடுத்து செல்லட்டுமா...' என்று கேட்டார் சிற்பி.மகிழ்ச்சியுடன், 'பாறாங்கல் இடையூறாய்தான் கிடக்கிறது; வழியில் வரும் பலரும் இடறி விழுகின்றனர். தாராளமாக எடுத்து செல்லுங்கள்...' என்றார் கடைக்காரர்.அதை உருட்டி சென்றார் சிற்பி; பின் நுட்பமாக செதுக்கினார்; அற்புதமான சிலையாக அது அமைந்தது. கடைத்தெருவில் விற்பனைக்கு வந்தது அந்த சிலை. போட்டி போட்டு விலை கேட்டனர் மக்கள். அதை வாங்க, அதற்கான கல்லை கொடுத்த கடைக்காரரும் முன்வரிசையில் நின்றார். முடிவில் அதிக விலை கொடுத்து வாங்கிய கடைக்காரர், 'இந்த அற்புத சிலைக்குரிய கல்லை, எந்த மலையில் எடுத்து வந்தீர்...' என்று கேட்டார்.புன்னகைத்தபடியே, 'ஐயா... தங்கள் கடை வாசலில் தான் கண்டெடுத்தேன்; என்னை நினைவில்லையா... ஆறு மாதங்களுக்கு முன், உங்கள் கடை முன் இடையூறாய் கிடந்த பாறாங்கல் தான் இது. இன்று சிலையாக நிமிர்ந்து நிற்கிறது...' என்றார் சிற்பி.அது கேட்டு வியப்பில் ஆழ்ந்த கடைக்காரரிடம், 'உங்கள் பார்வையில் இது தடைக்கல்லாய் தெரிந்தது. என் பார்வையில் கலை நுட்பம் பொதிந்ததாய் காட்சி தந்தது; இதில் வேண்டாத பகுதியை செதுக்கி எடுத்தேன்; கலைநயம் மிக்க சிலை எழிலாக வெளிப்பட்டது...' என்று விளக்கினார் சிற்பி.குழந்தைகளே... தேவையற்ற தீய குணங்களை நீக்கினால், பண்பு மிக்கவராக போற்றும் வகையில் வாழலாம்!- ஜி.அர்ஜூனன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !