அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வினாடிக்கு ஒரு உலோக பறவை!உலகிலேயே மிகவும் பெரிய விமான நிலையம், சிகாகோ பன்னாட்டு விமான நிலையம் தான். ஒவ்வொரு, 42.5 வினாடிகளுக்கு, ஒரு விமானம் பறந்து செல்வதும், இறங்கி வருவதுமாய் இருக்கின்றன. ஒரு மணி நேரத்தில், சராசரியாக, 85 விமானங்கள், விண் நோக்கி பறந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு, 2,035 விமானங்களும், வாரத்திற்கு, 14 ஆயிரத்து 255 முறையும், ஆண்டுக்கு, 7 லட்சத்து 41 ஆயிரத்து 272 முறையும் விமானங்கள் தரையிறங்குகின்றன.ஹையோடா!ஆமை, தவளை - பாதை, சிக்னல்!மனிதர்கள் சாலையை கடப் பதற்காக, சிக்னல்களும், சுரங்கப் பாதைகளும் அமைக்கப்படுகின்றன. சில நாடுகளில், தவளைகள் மற்றும் நண்டுகள் கடந்து செல்ல வசதியாக, சிறிய துளைகளும், சிக்னல்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சமீபத்தில், ஜப்பானில் ஆமைகளுக்காக, ரயில் தண்டவாளத்தை கடக்கும் சுரங்க பாதை ஒன்று, உருவாக்கப்பட்டுள்ளது.கோப், என்ற இடத்தில், கடற்கரையை ஒட்டிய பகுதியில், 'சுமா அக்குமா லைப் பார்க்' எனும் கடல் வாழ் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, ஆமைகளும் பராமரிக்கப் படுகின்றன. கோடை காலத்தில் கடற்கரையில் ஒதுங்கும் ஆமைகள், நிறைய முட்டைகளை இட்டு செல்லும். அவை குஞ்சு பொரித்ததும் கடலுக்கு செல்லும்.இந்த பூங்காவிற்கு அருகில் இருக்கும் ரயில் தட பாதை, ஆமைகளின் உயிருக்கு ஆபத்தாக இருந்தது. ரயிலில் சிக்கி ஏராளமான ஆமைகள் அழிவதால், பூங்கா நிர்வாகம், ரயில்வே அமைப்புடன் இணைந்து, ஆமைகளுக்கு தண்டவாளத்தை கடக்க தனிப்பாதை அமைக்கும் முயற்சியில் இறங்கியது.தண்டவாளத்திற்கு அடியில், 'யூ' வடிவ பாதையை சுரங்கப்பாதை போல அமைத்துள்ளனர். ஐந்து இடங்களில் இதுபோன்ற பாதைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் வழியே, ஆமைகள் மற்றும் அதன் குஞ்சுகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து செல்ல முடிகிறது. சூப்பரப்பு!டிராகன் ரிட்டர்ன்ஸ்!நெருப்பை உமிழும் ராட்சத பல்லி இனம், டிராகன். இதனுடன் தொடர்புடைய உயிரினங்களில், ஒன்று ஓல்ம். 18ம் நுாற்றாண்டின் இறுதியில் இந்த இனம் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது.ஆனால் சமீபத்தில் இந்த உயிரினத்தின் முட்டைகள், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஸ்லோவேனியாவில் உள்ள, போஸ்டோஜ்னா குகைகளில், கண்டெடுக்கப் பட்டன. சுமார், 60 முட்டைகள் சேகரிக்கப் பட்டதில், 22 முட்டைகள், குஞ்சு பொரிக்கும் நிலையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.ஓல்ம் பல்லிகள் சுமார், 100 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ஆற்றலுடையவை. ஆனால், ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சில முட்டைகளே இடும். அதிலும், 500 முட்டைகளில் ஒன்றிரண்டே குஞ்சு பொரிக்கும் ஆற்றல் பெற்றவை. எனவே, அவை அழிவை எதிர்கொண்டன.தற்போது, குகையில் சேகரிக்கப்பட்ட முட்டைகள், ஆய்வாளர்கள் முன்னிலையில், பாதுகாக்கப்பட்ட நிலையில், குஞ்சு பொரிக்க வைக்கப்பட்டது. ஒரு இளம் ஓல்ம் பல்லியின் பிறப்பு, அகச்சிவப்பு கதிர் கேமரா மூலம் படமாக பதிவு செய்யப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இதன் மூலம், டிராகன் என பட்டப் பெயரிட்டு அழைக்கப்படும், ஓல்ம் பல்லிகள் புத்துயிர் பெற்றுள்ளன. இந்த பல்லி, முழு வளர்ச்சி அடைய, 15 ஆண்டுகள் ஆகும். இந்த நுாற்றாண்டு முழுவதும், ஆயுள் கொண்டு வாழும்.அதாவது டிராகன் ரிட்டர்ன்ஸ்!சூப்பர் பையா... - சூப்பாதே பையா!குழந்தை பிறந்த வுடன், ஆறு மாதங் களுக்கும் பின், 'பால் பற்கள்' எனப்படும், தற்காலிக பற்கள் வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து, மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில் தான், அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பொதுவாக இந்த பருவத்தில், புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே துாங்க செய்து விடுவர். இதனால், குழந்தைகளின் பற்களில், அந்தப் பால் படிந்துவிடும். நம் வாயில் நிரந்தரமாக இருக்கும், 'ஸ்டிரெப் டோகாகஸ்' எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு, வினை புரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும்.குழந்தைகளுக்கு, இப்படிபட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க, பால் குடித்த உடனே, கொஞ்சம் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.பால் பற்கள் விழுந்து, நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும், தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே, அதே இடத்தில் நிரந்தரமான பல், சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில், இடையூறாக இருக்கும் பால் பற்களை, டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்காவிட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து, அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், சிலருக்கு முக அமைப்பே மாறி, அவலட்சனமாக தோற்றமளிக்கும். பெரும்பாலும், குழந்தை பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தமான பற்கள் வளரும் பருவத்தில், இந்த பழக்கம் தொடரும் போது, பற்களின் நேரான வளர்ச்சிக்கும், விரல்கள் இடையூறாக இருப்பதால், பற்கள் தம் இயல்பை விட்டு, விரல் சூப்பும் நிலைகேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்த பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.இதய துடிப்பை சொன்ன காகித உருளை!இப்போது, மருத்துவ துறையில் புதுப்புது அற்புதங்கள் வந்துவிட்டன. பெரும்பாலும், கருவிகள், இயந்திரங்கள் மனித உடலை, 'மானிட்டர்' பண்ணுகின்றன.மருத்துவத்தில் மிக முக்கியமான கருவி, ஸ்டெதஸ்கோப். அந்த காலத்தில், மருத்துவ வளர்ச்சி அவ்வளவாக இல்லை. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்டர், ரேனே லைனக் வழக்கம்போல நோயாளிகளை கவனித்து கொண்டிருந்தார்.திடீரென ஒரு நோயாளி, நெஞ்சை பிடித்தபடி, வலியால் துடித்தார்.உடனே, அவரை திருப்திபடுத்துவதற்காக, அருகில் இருந்த காகிதத்தை உருளையாக சுருட்டி, நோயாளியின் நெஞ்சில் வைத்து கவனிப்பது போல பரிசோதனை செய்தார்.என்ன ஆச்சர்யம்! காகித உருளையின் வழியே, நாடித்துடிப்பு லேசாக கேட்டது. பின், 1918ல் அதே முறையை பின்பற்றி, உருளை செய்து வைத்து, சிறிது காலம் இதயத்துடிப்பை அறிந்தனர். அன்றிலிருந்து, பல மாற்றங்கள் அடைந்து, இன்றைய நவீன 'ஸ்டெதஸ்கோப்' வடிவம் பெற்றது.என்றென்றும் அன்புடன்,அங்குராசு.