அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!கழுகோடு குடியிருப்பு!அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலை கழுகு. இதை, பெரும்பாலான அமெரிக்கர்கள், பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வடமேற்கு பகுதில் உள்ள அனலாஸ்கா தீவில் மட்டுமே, அதிகம் உள்ளன. இந்த தீவில், 2,000 பேருடன் அழகான, 600 வெண்தலை கழுகுகளும், உள்ளன. இங்குள்ளவர்கள், கழுகுகளை ஆச்சரியமாக பார்ப்பதில்லை. ஏனென்றால், இத்தீவு மக்களை, அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் கொத்தி காயப்படுத்துகின்றன. வெண்தலை கழுகுகள், உயரமான மரங்களில், கூடு கட்டும். அனலாஸ்கா தீவில், மரங்கள் அதிகம் இல்லாததால், வீட்டுக்கூரை, கட்டடம், கப்பல், கோபுரம் போன்றவற்றில், கூடு அமைக்கின்றன. இதனால், கழுகு - தீவுவாசிகள் இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. வீட்டிலிருந்து, சாதாரணமாக மக்கள் வெளியே வந்தாலும், கூடுகளுக்கு ஆபத்து என்று எண்ணி, கழுகுகள் ஆக்ரோஷமாக தாக்க துவங்கிவிடும்; இதை தவிர்க்கும் வகையில், தீவு முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.கழுகு இருப்பதை மறந்து, ஒரு இடத்தில் நுழைந்தால், விபரீதம் ஏற்பட்டு விடும். அதாவது, கழுகுகளின் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியது தான். கழுகுகளால் தாக்கப்படும், 10 பேரில், ஆறு பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கழுகுகளால், ஆண்டு முழுவதும் பாதிப்பு உண்டு. ஆனால் அடை காக்கும் நேரமான கோடையில் தான், பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அனலாஸ்கா தீவு, 128 கி.மீ., நீளம் கொண்டது. இதில், மனிதர்கள் வசிக்கக் கூடிய, பகுதிகளில் மட்டுமே, கழுகுகளும் வசிக்கின்றன. இந்த பகுதிகளில், மீன்கள், அதிக அளவில் கிடைப்பதால், உணவுப் பிரச்னை ஏற்படுவதில்லை. அனலாஸ்காவாசிகளில் பலர் கழுகுகளை நேசிக்கவே செய்கின்றனர். சிலர் அவற்றுக்கு உணவளிப்பதை, வழக்கமாக வைத்துள்ளனர். மனிதர்களை கண்டதும், புறா பயந்து பறந்து விடும். ஆனால், கழுகுகள் பயப்படுவதில்லை. அனலாஸ்காவில் உள்ள தபால் நிலையத்தில் தான், கழுகுகள் அதிக அளவில், கூடுகள் கட்டியுள்ளன. தலைக் கவசம், தோல் ஆடைகள் இன்றி, தபால் நிலையத்துக்கு செல்பவர்களை, நிச்சயம், மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த அளவு கழுகுகளின் தாக்குதல், ஆக்ரோஷமாக இருக்கும். இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர், தந்திக் கம்பங்கள், வீட்டுக் கூரைகள், வாகனங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகளை கண்டு, ஆச்சரியம் அடைவர். ஆனால், கழுகால் தாக்கப்படும் போது தான், பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வர்.சூப்பர்... சூப்பர்...நம் நாட்டின், விரைவான, சூப்பர் கணினி, பூனா, ஐ.ஐ.டி.எம்., கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர், 'ப்ரத்யுஷ்!' அதாவது, சூரியன். இவ்வகை கணினிகள், அதிவேக செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது, இந்திய வானிலையை கண்காணிப்பதற்கும், கணிப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது. காலநிலையில் துவங்கி, சுனாமி, சூறாவளி, பூகம்பம் போன்றவை ஏற்படும் சாத்தியங்கள், காற்றின் துாய்மை உள்ளிட்ட, தகவல்களை, தினமும் சேகரிக்கிறது. இது, இந்தியாவின் இரண்டாவது, அதிவேக கணினி.- என்றென்றும் அன்புடன், அங்குராசு!