அதிமேதாவி அங்குராசு!
காட்டுயானம்!நெல் தானியம் பற்றி பலருக்கு தெரியாது. அரிசி, அப்படியே மரத்தில் காய்க்கிறது என, நினைப்பவர்களும் உண்டு!தமிழகத்தில் நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள, பாரம்பரிய நெல் காட்டுயானம்; மற்ற நெல் ரகங்களை விட மருத்துவ குணம் உடையது. எந்த தட்ப வெப்ப நிலையிலும் விளையும். அதிபட்சம், ஏழு அடி வரை வளரும். வறட்சி, வெள்ளத்தை தாங்கி மகசூல் கொடுக்கும். இந்த ரகத்தை சாகுபடி செய்யும் வயலில், யானை புகுந்தால் கூட வெளியே தெரியாது என்பதால், காட்டுயானம் என்ற பெயர் வந்தது. இந்த அரிசியை, மண் பானையில் சமைத்து, முதல்நாள் மாலை தண்ணீர் ஊற்றி , மறு நாள் காலை, நீராகாரத்துடன் சாப்பிட்டு வந்தால், நோயால் முடங்கிக் கிடப்பவரும், எழுந்து நடப்பர். காட்டுயானம் பச்சரிசியை, கஞ்சி காய்ச்சி, கருவேப்பிலையைக் கொத்தாக போட்டு, மூடி வைத்து, மறுநாள் காலை, சாப்பிட்டு வந்தால், நோய்கள் தீரும்.ஏக்கருக்கு, 24 மூட்டை மகசூல் தரும்; 180 நாள் வயதுடையது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இன்றி சிறப்பாக வளரும். காட்டுயானம் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை பேணுவோம்.காலணியில் சர்க்கஸ்!நவீன உலகத்தில், பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பது, குதிகால் உயர்த்தும் செருப்புகள். அவை அணிவதை, அந்தஸ்தாக நினைக்கின்றனர். அதனால், ஏற்படும் பின்விளைவு பற்றி கவலைப்படுவதில்லை. இந்த வகை காலணிகள் அணிவதால், மூட்டு வலி ஏற்படும்; உடல் சமநிலை மாறும்; உடலுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படும்.நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள், இயற்கைக்கு மாறாக, முன்னுக்கு தள்ளப்படும். சமதளத்தில் நடந்து பழகிய கால்கள், 'ஹைஹீல்ஸ்' அணிந்து சர்க்கஸ் செய்வது போல் நடைப்பயில்வது சிரமம். காலணியின் உயரத்திற்கேற்ப, உடலில் தொந்தரவுகள் ஏற்படும். கர்ப்பப்பை பாதிக்கப்படும்.பெண்களே... நாகரிகத்தை விட, உடல் ஆரோக்கியம் முக்கியம்!- என்றறென்றும் அன்புடன், அங்குராசு.