அதிமேதாவி அங்குராசு!
உலகில், வேலைக்கு தான் பஞ்சம்; பொழுது போக்குவதற்கும், விளையாட்டுக்கும் பஞ்சமே இல்லை. இப்போது நடக்கும் போட்டிகள் எல்லாம் அலுத்து, 'வித்தியாசமாக ஏதாவது நடக்கிறதா...' என, தேட துவங்கி விட்டனர் விளையாட்டு ரசிகர்கள். வித்தியாசத்தை விரும்புவோருக்கு, விலங்கு போட்டிகள் பல நாடுகளிலும் நடக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்.நத்தை ஓட்டம்!உலகிலேயே, மிகவும் மெதுவாக நகரும் உயிரினம் நத்தை. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், நத்தைகளுக்கிடையே ஓட்டப்பந்தயம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்க தேர்வு செய்யும் நத்தைகளை வரிசையாக நிறுத்தி, அவற்றின் ஓட்டுப் பகுதியில், போட்டி பதிவு எண்ணை எழுதுகின்றனர். எண் பதிவு செய்ததும், ஓட்ட பந்தயம் துவங்கும். இந்த பந்தயத்தின் ஓட்ட துாரம், 15 அடி; இந்த துாரத்தை கடக்க, எவ்வளவு நேரம் ஆகும். மிகவும் பொறுமையாக, நத்தைகள் ஓடுவதை பார்த்து, அந்த நாட்டினர் குதுாகலிக்கின்றனர்.வான்கோழி பவுலிங்!அமெரிக்காவில் நடக்கும் பிரபலமான விளையாட்டு, வான்கோழி பவுலிங். ஒரு பெரிய பந்தில், இரண்டு துளை போன்ற அமைப்பு இருக்கும். அந்த துளைகளில் விரல்களை விட்டு, பந்தை உருட்டி விடுவர். பந்து எதிரே நிறுத்தியிருக்கும், 10 டப்பாக்களை வீழ்த்த வேண்டும். இப்படி ஒரு விளையாட்டு, பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.வான்கோழி பவுலிங் விளையாட்டும், இது போன்றது தான். ஆனால், உருட்டி விடும் பந்தில் தான் சிறிய மாற்றம். பந்துக்கு பதிலாக, வான்கோழி இறைச்சியை குளிர வைத்து, பந்து போல் பயன்படுத்துகின்றனர்.பன்றி பந்தாட்டம்! உலகில், அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு, கால் பந்தாட்டம். ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் விரிந்திருக்கும் ரஷ்யாவில், ஆண்டுக்கு ஒருமுறை சற்று நுதனமான கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படுகிறது. மனிதர்களுக்குப் பதிலாக, பன்றிகள் களமிறக்கப்படுகின்றன. போட்டிக்காக, 20 பன்றிகளுக்கு பயிற்சியளிப்பர். அவற்றை, இரு அணிகளாக பிரித்து, களம் இறக்குவர். மனிதர்களைப் போல் அவை பந்தை அடித்து ஆடும். இது ரசிகர்களை பரவசப்படுத்தும். சில பன்றிகளுக்கு, பிரத்யேக ரசிகர் பட்டாளமே உண்டு.வெற்றிபெறும் அணிக்கு, கேடயம் வழங்கப்படுகிறது. இந்த பந்தாட்டத்தை காண, ரஷ்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், ரசிகர்கள் திரள்கின்றனர்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.