அதிமேதாவி அங்குராசு!
பிளாஸ்டிக் சர்ஜரி!முகத்தை, விரும்பியபடி பொலிவாக்கும் சிகிச்சை முறைக்கு, 'பிளாஸ்டிக் சர்ஜரி' என்று பெயர். இது பொதுவான வார்த்தை. பிளாஸ்டிக்கிற்கும், இந்த சிகிச்சை முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரேக்க சொல்லான, 'பிளாஸ்டிக்கோஸ்' என்பதற்கு, 'மோல்ட்' செய்வது என்று பொருள். இதிலிருந்து உருவானதுதான், 'பிளாஸ்டிக்' என்ற சொல்.இயற்கையாகவோ, விபத்திலோ உடல் உறுப்புகள் சேதமடைந்தால், அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதை தான் பிளாஸ்டிக் சர்ஜரி என்பர். மூக்கு சேதமடைந்தாலோ, விரல் துண்டிக்கப்பட்டாலோ, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சீரமைத்து விடலாம். இதில், 'காஸ்மெட்டிக் சர்ஜரி' என்பதும் ஒரு வகை; இது, முழுக்க முழுக்க, உறுப்பில் பொலிவும், அழகும் ஏற்படுத்த செய்யப்படுகிறது. காது பெரிதாக இருக்கிறது...மூக்கு நீளமாக இருக்கிறது... நெற்றி துாக்கலாக இருக்கிறது...இவ்வாறு எண்ணி வருந்துவோர், அவற்றை சீரமைக்க மேற்கொள்வது தான் காஸ்மெட்டிக் சர்ஜரி. இந்த சிகிச்சையால் பக்க விளைவு ஏதும் இல்லை. ஆனால், மிக கவனமாக செய்ய வேண்டும். அறத்துடன் செய்ய வேண்டிய, 'எத்திகல் சர்ஜரி' என்றும் இதை சொல்வர்.சிகிச்சை பெறப்போகிறவர் பற்றிய விபரம், அவருக்குள்ள நோய் பாதிப்பு, எந்த மாதிரி மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்கிறார் போன்ற விபரங்களை அறிந்த பின் தான், மருத்துவ நிபுணர்கள் இந்த வகை சிகிச்சை முறையை துவங்க வேண்டும்.கவர்ச்சியற்ற முகத்தை, பிளாஸ்டிக் சர்ஜரியால் விரும்பும் விதமாக மாற்றும் முறைக்கு, 'ஸ்டீரியோ லித்தோ' என்று பெயர். இந்த வகை சிகிச்சை முறை துவங்கிய காலத்தில், கால் அல்லது விலா எலும்புகளை எடுத்து பயன்படுத்தினர். இப்போது, 'ஹைட்ராக்சி அபைடட்' எனப்படும் ரசாயன பொருளை பயன்படுத்தி, செயற்கை எலும்பு தயாரிக்கின்றனர்.அதைப் பயன்படுத்தி தான், முகத்தை கவர்ச்சியாக மாற்றும், ஸ்டீரியோ லித்தோ சர்ஜரி நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சன், இந்த முறையில் தான், முகத்தோற்றத்தை அடிக்கடி மாற்றியமைத்துக் கொண்டார்.ஆப்ரேஷன் கருவி!அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் கருவி, தனிப்பட்ட உலோகத்தால் செய்யப்படுவதில்லை. தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகிய உலோகங்களை குறிப்பிட்ட அளவில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இவற்றை முறையே, 50, 25, 25 என்ற விகிதத்தில் கலக்கும் போது, புதிய உலோகம் உருவாகிறது. அதன் பெயர், ஜெர்மன் சில்வர். இதில் செய்யப்படும் கருவிகள் எவ்வளவு நாட்களானாலும் கறுக்காது, துருப்பிடிக்காது. கூர்மையும் குறையாது. எடை குறைவாக இருக்கும்; கையாள்வதும் சுலபம். இந்த உலோக கலவைக்கு மதிப்பு அதிகம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.