அதிமேதாவி அங்குராசு!
அத்தியின் சக்தி!ஊட்டச்சத்துகள் நிறைந்தது அத்திப்பழம். இனிப்பானது; மிக மெல்லிய தோலை உடையது. சதைப்பற்றும், மிகச் சிறிய விதைகளும் கொண்டது. அறுவடை செய்த பின், ஒரு வாரம் மட்டுமே பாதுகாக்க முடியும். எனவே, உலகில் விளையும் அத்திப்பழங்களில், 90 சதவீதம் உலர்த்தி சேமித்து பயன்படுத்தப்படுகிறது. இதில் தாதுச்சத்துகள், தாய்பாலில் உள்ளது போல் சிறப்பாக உள்ளது. வைட்டமின் ஏ, பி1, பி2, கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், குளோரின் சத்துகள் மிகுதியாக உள்ளன.உடலில் கரையும் குளுகோஸ் அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது. குடல் பாதை ஒழுங்கமைப்பிற்கு, அத்தியாவசியமான சத்து நிறைந்துள்ளது. இதில் காணப்படும் பெக்டின், நார்சத்து மிகுந்தது. இது, கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆற்றல் தரும். தொண்டைக் கரகரப்பை குணப்படுத்தும். சமையலில், சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். ரத்தத்தில், சோடியம் அளவு அதிகமாகவும், பொட்டாஷியம் குறைவாகவும் இருக்கும் போது தான், ரத்த அழுத்த பிரச்னை ஏற்படுகிறது. அத்திப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் உப்புகளின் அளவு சமநிலை பெற்று, ரத்த அழுத்த பாதிப்பு குறையும்.உடலை பலமாக்க விரும்புவோர், உலர்ந்த அத்தியை இரவில் பசும்பாலில் ஊற வைத்து, காலையில் அருந்தலாம். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். அத்தி மிகச் சிறந்த மலமிளக்கி. நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையது. சிறுநீர் வெளியேற உதவுகிறது. கல்லீரலை சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது.அத்தியை உணவுப் பட்டியலில் சேர்த்து பலன் பெறுவோம்.நல்லெண்ணெய்!எள், நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது, எண்ணெய். எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது. ஆனால், எண்ணெய் என்பது எல்லா வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகிவிட்டது. எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க, 'நல்லெண்ணெய்' என்ற சொல் பயன்படுகிறது. உடல் நலத்துக்கு உகந்தது என்பதால், 'நல்ல எண்ணெய்' என்ற பொருள் தருகிறது. தமிழகத்தில், சமையலில் அதிகம் பயன்படுகிறது நல்லெண்ணெய். ஆசியா கண்ட பகுதியில், சீனர், கொரியர், ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகிக்கின்றனர். தமிழர் மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதன் மகத்துவம் பற்றி பார்போம்...நல்லெண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். உடல் சூட்டை தணிக்கும். சீராக வியர்வை வெளியேற உதவும். இதில், 'சீசேமோல்' என்ற பொருள் இதய நோயை தடுக்கிறது. மக்னீஷியம் சத்து, நீரிழிவு நோயை தடுக்கும். இதில் உள்ள ஜிங்க் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவும். குடலியக்கம் சீராக நடக்கும். செரிமானப் பிரச்சனையை தீர்க்கும்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.