வாழைப்பழத்தோல்!
மருங்காபுரி என்றொரு சிறிய நாடு. நிலவளம், நீர்வளம் உட்பட எல்லா வளமும் பெற்றிருந்தது. அத்துடன் எல்லாத் துறைகளிலும் அது சிறந்து விளங்கியது.அந்த நாட்டை கீர்த்திவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். அவனுக்கு மூன்று மனைவியர் இருந்தும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பல வழிகளிலும் யாகம் செய்தான். மக்களுக்கு தான தருமங்கள் செய்தான். அரசாங்க கஜானா காலியாகிக் கொண்டே இருந்தது.செலவு, சேதாரங்களைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. அவனது கவலை யெல்லாம் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதாகும்.ஒருநாள் மாலை நேரம். தனது மூன்றாவது மனைவியோடு அரண்மனையின் உப்பிரிகையில் அமர்ந்து கொண்டு, உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாதுகாப்புக்கென இருந்த சேவகர்கள் சிலர் மன்னனிடம் ஓடிவந்து, ''அரசே! தங்களைக் காண முனிவர் ஒருவர் வந்திருக் கிறார்,'' என்ற தகவலைத் தெரிவித்தனர்.''அவரை வரச்சொல்,'' என்று சேவகர் களுக்கு உத்தரவிட்டான். தன் மனைவியை அவளது அறைக்குச் செல்லும்படி கூறிவிட்டு, முனிவருக்காகக் காத்திருந்தான்.முனிவர் வந்தார். மன்னன் அவரை எழுந்து நின்று வணங்கி வரவேற்றான். மன்னனின் முகத்தைக் கண்டதும் அவர் புத்திரபாக்கியத்துக்காக ஏங்குகிறார் என்பதை முனிவர் புரிந்துக் கொண்டார்.தன் பையில் கொண்டு வந்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து மன்னனிடம் கொடுத்தார் முனிவர்.''இது சாதாரண பழம் இல்லை. இதைச் சாப்பிடுவோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்,'' என்று பழத்தின் மகிமையை எடுத்து உரைத்தார்.மன்னருக்கு அளவற்ற சந்தோஷம். முனிவரைப் பலவாறு புகழ்ந்து பாராட்டி பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பினார்.ஓரிரு நாட்கள் சென்றபின் தனது மனைவியர் மூவரையும் அழைத்து வைத்து அவர்களுடன் உப்பரிகையில் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தான் மன்னன். வாழைப் பழத்தின் ரகசியத்தை அவர்களிடம் சொல்ல வில்லை. மன்னனின் முகத்தில் ஒரு புதிய ஒளி தெரிவதாக மனைவியர் உணர்ந்தனர். அவர் களுக்கு மனதுக்குள் சந்தோஷம்.மன்னன் தன்னிடம் வைத்திருந்த வாழைப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டான். தோலை வெளியே வீசி எறிந்தான். அது தெருவில் வந்து விழுந்தது.அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த இளம் துறவி வாழைப்பழத்தின் தோல் கீழே கிடப்பதைக் காணாமல் தவறி அதன் மீது காலை வைத்தார். தோலின் மீது கால் வைத்ததுதான் தாமதம். துறவி வழுக்கிக் கீழே விழுந்து விட்டார்.இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன். 'மகிமை பொருந்திய வாழைப் பழத்தின் தோலை மிதித்து நாசமாக்கி விட்டானே பாவி...' என்று கோபம் கொண்டான்.அரசவைக்கு அந்த துறவியை அழைத்து வரும்படி உத்தரவிட்டான். சேவகர்கள் அந்தத் துறவியை அரசவைக்கு இழுத்து வந்து மன்னன் முன் நிறுத்தினர். மன்னன் அவனை வெறித்துப் பார்த்தான். துறவி என்று கூட அவன் நினைக்கவில்லை. அந்த அளவுக்கு அவனுக்குக் கல் நெஞ்சு ஆகிவிட்டது.''நான் வீசியெறிந்த வாழைப்பழத் தோலை ஏன் மிதித்து வீணாக்கினாய்?'' என்று அந்தத் துறவியைப் பார்த்து மன்னன் கேட்டான்.''மன்னா! கீழே கிடந்த அந்தத் தோல் என் கண்ணில்படவில்லை. தவறுதலாக மிதித்து விட்டேன். அதற்குத் தண்டனையாக கீழே விழுந்து உடம்பு வலியை வாங்கிக் கட்டிக் கொண்டேன். இருந்தபோதிலும், நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ள தாங்கள் இவ்வாறு வாழைப்பழத் தோலை தெருவில் வீசி எறிவது பொருத்தமான செயல் அல்ல என்று நினைக் கிறேன்,'' என்று துறவி பதில் அளித்தான்.தோல் விவகாரம் மன்னனுக்கும் துறவிக்கு மிடையே மோதலை உருவாக்கி விட்டது. மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.''இந்தத் துறவிக்கு நூறு கசையடி கொடுங்கள்,'' என்று உத்தரவிட்டான் மன்னன்.மன்னரின் உத்தரவைக் கேட்ட மதிமந்திரி பதை பதைத்தார்.மன்னரின் இருக்கை அருகே சென்று ஏதோ ரகசியமாக மன்னனிடம் கூறினார்.''மந்திரியாரே! இப்படிப் பட்டவர்களையா மன்னிக்க வேண்டும் என்று சொல்கிறீர்?'' என்று ஆவேசமாகக் கூறிய மன்னன். மந்திரி சொன்ன ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டான்.மன்னன் துறவிக்கு வழங்கிய தண்டனையை அரசவையில் இருந்த பலரும் ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால், தங்கள் கருத்தை மன்னனிடம் எடுத்துச் சொல்லும் திராணி அவர்களிடம் இல்லை.தண்டனையை நிறைவேற்றும் சேவகன் சவுக்கை எடுத்துக் கொண்டு, துறவி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.துறவியின் மேனியில் கசையடிகள் விழத் தொடங்கின. துறவியோ அழவும் இல்லை; கதறவும் இல்லை. மாறாக கசையடி தன் மேனியில் விழும்போதெல்லாம் அவன் சிரித்துக் கொண்டே இருந்தான். அவனது சிரிப்பொலி அரசவையை கலகலக்க வைத்தது. நூறாவது அடி விழுந்தபோது அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.மன்னன் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, துறவியைப் பார்த்து, மயக்க நிலையில் இருந்த அவனிடம், கசையடி விழவிழக் கதற வேண்டிய நீ சிரித்ததன் மர்மம் என்ன?'' என்று கேட்டான்.''நன் சாகும் தருவாயில் இருக்கிறேன். உங்கள் மதி மந்திரியிடம் கேளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டான். அவனது ஆவி பிரிந்தது.மந்திரி எழுந்தார். மன்னரைப் பார்த்து, ''மன்னா! புத்திரபாக்கியம் கிட்ட வேண்டிய நேரத்தில், ஒரு நல்ல புத்திரனை இழந்து விட்டோம். இந்த நிலை ஏற்பட தாங்களே பொறுப்பு. நீங்கள் அறிவித்த தண்டனையைக் கேட்டதும் இந்தத் துறவி தன் மனதுக்குள் சிரித்தான். ஏன் தெரியுமா?''நீங்கள் வீசி எறிந்த வாழைப்பழத் தோலை மிதித்த அவனுக்கே நூறு கசையடிகள் தண்டனை என்றால், பழத்தைத் தின்ற உங்களுக்கு எத்தனை கசையடிகள் தண்டனை கிடைக்குமோ என்று அவன் எண்ணியபோது அவனுக்கு அடி விழுந்தாலும் சிரிப்புத்தான் வர முடியும்?'' என்று கூறினார்.தலை நிமிர்ந்து எல்லாரும் சிந்திக்க ஆரம் பித்தனர். மன்னன் கீர்த்திவர்மன் மட்டும், தலையைக் குனிந்தவண்ணம் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை சரியாகத்தானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.***