பிறந்தநாள் விருந்து!
கந்தசாமிபுரம் காட்டில் வசித்த முயல்குட்டி டிங்குவிற்கு துாக்கம் வரவில்லை; மறுநாள் நடக்கப்போகும், கொண்டாட்டத்தை நினைத்து, கற்பனையில் மிதந்து கொண்டிருந்தது.குடும்பத்தின் கடைக்குட்டி டிங்கு; மென்மையான பொன் நிறத்தில் துறுதுறுப்புடன் இருக்கும். காட்டில் வாழும் மற்ற விலங்குகள் துாக்கி, கொஞ்சி மகிழும். அதன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வர, அனைத்து விலங்குகளுக்கும் அழைப்பு அனுப்பியது அம்மா முயல்.வீட்டை சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்குப்படுத்தியது அப்பா முயல். தோரணங்கள் கட்டி அலங்கரித்து, அழகிய விளக்குகளால் அழகு படுத்துவது பற்றி அம்மாவிடம் ஆலோசனைக் கேட்டுக்கொண்டிருந்தது டிங்கு.விருந்து உபசரணைக்கு தேவைப்படும், கை துடைக்கும் துண்டு, பல் குத்தும் குச்சி, தேவையான வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு உரிய இடங்களில் வைத்தபடி, 'வாசலில் மீன்வடிவ கோலம் போடட்டுமா...' என்றது தங்கை முயல்.'அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நீ ஏன் குறுக்கே தலையிடுற...' என, சண்டைக்கு போனது டிங்கு. பாங்காக அறிவுரைத்து சண்டையை விலக்கியது அம்மா.விருந்தினருக்கு, உணவு தயாரிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுக்கு ஆள் யோசனையை அள்ளி வழங்கின. 'இயற்கையாக விளைந்த காய்கறியில் உணவு தயாரித்து பரிமாறினால் நலம் காக்கலாம்...' என்றது அம்மா.'என் நண்பர்கள், பீட்சா, பர்க்கர் தான் சாப்பிடுவாங்க...' என, நாக்கை தொங்கவிட்டது டிங்கு. தரமான உணவுகளை அளவுடன் தயாரித்து, வீணாக்காமல் பரிமாற முடிவு செய்தன.மாலை, 5:00 மணி. விழாவுக்கு சாரையாக வருகை புரிந்தன விலங்குகள். வாசலில் நின்று பன்னீர் தெளித்து வரவேற்றது அப்பா முயல். பளபள உடையில் மகிழ்ச்சியில் திளைத்த டிங்கு, கேக் வெட்டியதும் நிகழ்ச்சி துவங்கியது. பிறந்தநாள் பாட்டை பாடி, மகிழ்ச்சியை பகிர்ந்தன விலங்குகள். வண்ணப் பந்து ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது யானை; அழகு சாதன பொருட்கள் அடங்கிய பெட்டியை தந்தது மயில். இசைப்பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வழங்கியது குயில்.மறுநாள், பள்ளிக்கு செல்லவில்லை டிங்கு. பிறந்தநாள் விருந்தில் கண்டபடி சாப்பிட்டதால், வயிறு உப்பி காய்ச்சலில் விழுந்தது. அம்மா சமைத்து தந்த மருந்து கஞ்சியை குடித்து ஓய்வெடுத்தது. மாலையில், பள்ளி முடிந்ததும், டிங்குவை தேடி வந்தன நண்பர்கள். அவற்றை கண்டதும், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து எழுந்தது. சற்று தொலைவிலிருந்த மைதானத்தில் பரிசாக கிடைத்த பந்தை வீசி விளையாடின. பந்து உருண்டு, சிறிய குழிக்குள் விழுந்தது. பலமுறை முயன்றும் வெளியே எடுக்க முடியவில்லை.அந்த வழியாக வந்த யானையிடம், 'குழியில் விழுந்த பந்தை தும்பிக்கையால் எடுத்து தாரமுடியுமா...' என, கேட்டது டிங்கு. 'குழியில் கையை விட்டால் உடம்புக்கு ஆகாது...' என, அகன்றது.துள்ளிக்குதித்து வந்த மானை நோக்கி, 'கொம்பினால், பந்தை எடுத்து தருகிறாயா...' என்றதும், 'என் நண்பனைப் பற்றிய குறும்படம், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாவதை பாக்கப் போறேன்...' என்றபடி ஓடியது. தாவிய குரங்கு, 'உடை அழுக்காகி விடும்...' என்று சாக்கு சொல்லி பக்கத்து மரத்துக்கு குதித்தது.சூரியன் மறைந்து கொண்டிருந்ததால் சோகத்தில் துவண்டது டிங்கு. சற்றுதுாரம் நடந்து, 'உதவ யாராவது இருக்கின்றனரா' என்று தேடியது. வழியில், நீர் குட்டை ஒன்றை கண்டதும், தாய் முயல் கூறிய, 'தாகம் தீர்த்த காகம்' கதை நினைவுக்கு வந்தது.குழாங்கற்களை குடத்தில் நிரப்பி, நீர் அருந்திய காக்கை போல், குட்டை தண்ணீரை, குழியில் நிரப்பி, பந்தை மீட்டது டிங்கு. விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தன. டிங்குவின் சமயோசித அறிவை போற்றி புகழ்ந்தன.என்ன அரும்புகளே... வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும் போது, சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த சிந்தனை, தடைகளை தவிடுபொடி ஆக்கும் என்பதை புரிந்து கொண்டீர்கள் தானே!ரா.கீதாலட்சுமி