வகுப்பில் பாய்ந்த ரத்தம்!
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, பனந்தோப்புத் தெரு, நடுநிலைப் பள்ளியில், அரையாண்டு தேர்வில், 'டபுள் ப்ரொமோஷன்' வாங்கியதால், 2ம் வகுப்புக்கு மாற்றப்பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர், மிகவும் உயரமானவர்; கடுமையானவர். தவறு செய்தால், சிலேட்டில் முட்டை வரைந்து, அதை தலையில் சுமந்து, பள்ளி வளாகத்தை சுற்றி வரச் சொல்வார். கற்பிப்பதில் அபார திறமையுள்ளவர். ஒரு நாள், கடும் கோபத்தில், ஒரு மாணவன் தலையில் சிலேட்டால் அடித்துவிட்டார். சிலேட்டு தகரம் கீறி, தோல் கிழிந்து, ரத்தம், 'குபுக்... குபுக்...' என, கொட்டியது. எல்லாரும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்க, அவர், தன் புது துண்டை தண்ணீரில் நனைத்து, ரத்தம் வந்த பகுதியில், கட்டுப் போட்டு, தாமதிக்கமால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரது பணி ஈடுபாடு பற்றி தெரிந்ததால், யாரும் குற்றம், குறை சொல்லவில்லை. அந்த கால ஆசிரியர்கள், கடுமையாக இருந்தாலும், சமயோசிதமாகவும், கருணையாகவும் நடந்த கொண்டனர். இந்த சம்பவம் நடந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. என் நெஞ்சில், பசுமையாக இருக்கிறது. - க.நா.ராமகிருஷ்ணன், சென்னை.