நெருப்புக் கோட்டை (9)
சென்றவாரம்: இளவரசன் இளங்குமரனை ஏமாற்றி, நயவஞ்சகமாக தன் அடிமையாக இருக்க சத்தியம் வாங்கினான் மொட்டைத்தலையன். கந்தர்வபுரி சக்கரவர்த்தியை காண மொட்டைத்தலையன் ஊர்வலமாக சென்றான். இனி-அடிமை உடையில் தலை குனிந்தபடி வரும் இளங்குமரனின் கண்ணியத்தையும், அழகையும், கம்பீரத்தையும் கண்டு, 'ஐயோ, பாவம்! யார் இந்த இளைஞன். ஏன் இப்படிச் சோகமே உருவாகக் காணப்படுகிறான்?' என்று இரக்கப்பட்டனர். இந்த அழகிய வாலிபன் இளவரசனாக இருக்கக் கூடாதா என்று ஆதங்கப்பட்டனர். கூட்டத்தினரின் ஆரவாரமும், ஆர்வமும் மெல்ல மெல்லக் கரைந்தது.கொம்புகள் ஊதப்பட்டன; முரசுகள் அதிர்ந்தன; சங்கநாதம் ஒலித்தது. கந்தர்வபுரி இளவரசனின் வருகையை அறிவிக்க, கொலுமண்டபத்தில் கூடியிருந்த அத்தனை விழிகளும் முன்னால் வரும் மொட்டைத்தலையனை கண்டு விரிந்தன; வியந்தன. வெறுப்பை, வேதனையை வெளிப்படுத்தின.இவற்றை எதையும் லட்சியம் செய்யாத மொட்டைத் தலையன், குதிரையிலிருந்து குதித்து இறங்கினான். அவனீந்திரா மன்னரின் அறிமுகக் கடிதச் சுருளுடன், மரகதபுரி மன்னர் மகேந்திரவர்மரை நோக்கி நடந்தான்.மொழு மொழு மொட்டைத் தலையுடன் ராஜ உடையில் ஒருவனை, மரகதபுரி வீரர்கள் அழைத்து வருவதைக் கண்டு அத்தனை கண்களிலும் வெறுப்பு வழிந்தது.மகேந்திரவர்மருக்குமே முகம் ஏதோ போலாயிற்று. அதற்குள் போலி இளவரசன் சக்கரவர்த்தியின் முன் மண்டியிட்டு, ''பெரியப்பா, நமஸ்காரம்! உங்கள் சகோதரர் கந்தர்வபுரி மன்னர் அவனீந்திராவின் மகன் இளங்குமரன். இதோ, தந்தை என்னை அறிமுகப்படுத்தி எழுதியுள்ள கடிதம்!'' என்று கூறி அவரிடம் நீட்டினான்.மகிழ்ச்சி மறைந்து விட்ட முகத்தோடு, மவுனமாக அக்கடிதத்தை வாங்கி படித்தார். அது தம்பியின் கையெழுத்துத்தான். மொட்டைத் தலை இளைஞனை தன் மகன் இளங்குமரன் என்று அக்கடிதம் உறுதி செய்தது.'நாம் எப்படிக் குறை கூறமுடியும்? அரச குடும்பத்தில் இப்படியொரு அவலட்சணம் பிறக்க வேண்டுமென்பது ஆண்டவன் விருப்பமாக இருக்கும்போது, அதைக் கண்டு முகம் சுளித்து என்ன பயன்? வெளித்தோற்றத்தைக் கண்டு ஒரு மனிதனை எடை போட முடியாது. இவன் சிறந்த அறிவாளியாக, மாவீரனாக இருக்கலாமே! எப்படியானாலும் என் தம்பியின் மகன், வரவேற்கப்பட வேண்டியவன்' என்று மனத்தைத் தேற்றிக் கொண்டார்.ஆனால் -அவையிலிருந்த அத்தனை பேரின் பார்வையும், அத்தாணி மாடத்திலிருந்த அரச மகளிர் அனைவரின் கண்களும் மொட்டையனின் பின்னால் அவன் பணியாளனாகத் தலை குனிந்து நின்றிருந்த இளங்குமரனையே மொய்த்தன!'என்ன வசீகரமான தோற்றம்! எத்தனை கம்பீரமான உடல்வாகு. தலை நிமிராது போனாலும், அம்முகத்தில், அக்கண்களில் அறிவொளியும், கண்ணியமும் புலப்படுகின்றனவே. பணியாளனாகிய இவன் இளவரசனாக இருக்கக் கூடாதா!' என்று ஆசைப்பட்டது. சக்கரவர்த்தி, தம்பி மகனிடம் குடும்ப நலன் விசாரித்தார். பயணம் சிரமமில்லாதிருந்ததா என்று கேட்டார். போலி இளவரசனும் தக்கவாறு பதிலளித்தான். அப்போது கொலு மண்டபத்திலுள்ளோரின் பார்வையெல்லாம் இளங்குமரன் மீது பதிந்திருப்பதைக் கண்டு மொட்டையனுக்கு ஆத்திரமாக இருந்தது.இளங்குமரனை அங்கிருந்து வெளியேற்றாவிட்டால், தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது. அதோடு, தன் இளவரசன் வேஷத்துக்கு ஏற்ப, அடிமையான அவனை அதிகாரம் செய்து, தன் தகுதியை நிலை நாட்ட வேண்டுமென்று முடிவு செய்தான் மொட்டையன்.''ஏய் அடிமை நாயே! இன்னும் ஏன் கொலுமண்டபத்தில் நின்றுகொண்டிருக்கிறாய்? உயர் குடியில் பிறந்தவர்கள் உள்ள இடத்தில் உனக்கென்ன வேலை? குதிரை லாயத்துக்குப் போய், குதிரைகளின் உடல் வலி தீரத் தேய்த்துவிடு. அவை களைத்திருக்கும். புல்வெளிக்குக் கூட்டிப் போய்ப் புரளவிட்டு அழைத்து வா, போ!'' என்று ஆணையிட்டான்.என்னதான் சத்தியம் செய்து கொடுத்திருந்தாலும், தனக்கு நேர்ந்த கதியை நினைத்து குமுறிக் கொண்டிருந்தான் இளங்குமரன். இப்போது சபை நடுவே தன்னை அக்கொடியவன் அதிகாரம் செய்யவே, ஆத்திரப்பட்டு உதடுகள் துடிக்க மொட்டையனைப் பார்த்தான். குற்றவாளியான மொட்டையனுக்குக் குலை நடுக்கமெடுத்தது.உடனே சிங்காதனத்திலிருந்து இறங்கி, வேகமாக இளங்குமரன் அருகில் வந்து, ''என்னடா முறைக்கிறாய்?'' என்று கூறி இளவரசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.''எல்லாம் மறந்துவிட்டதா? சத்திய சுத்தனைப் போல பேசினாயே... ஐயா, என்னை உங்கள் அடிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று... போ... வாக்குத் தவறாமல் நடந்துகொள்...'' என்று அவனுக்குச் சூசகமாக நிபந்தனையை நினைவுபடுத்திப் பிடித்துத் தள்ளினான்.ஆத்திரமும், கோபமும், கண்ணீராக வடிய, ''அப்படியே ஆகட்டும் ஐயா. நான் உங்கள் அடிமைதான். அதை மறக்க மாட்டேன்,'' என்று கூறியபடி, தள்ளாடி தலைகுனிந்து வெளியேறினான் இளவரசன் இளங்குமரன்.தம்பி மகனின் இத்தகாத செயலைக் கண்ட சக்கரவர்த்தி, ''குமரா! நாம் பணியாளர்களிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாது. ஆண்டவன் படைப்பில் அனைவரும் ஒன்றுதான். ஏழைகளிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டும்,'' என்றார்.மொட்டைத்தலையன் அட்டகாசமாகச் சிரித்தபடி அலட்சியமாக, ''பெரியப்பா, காட்டு விலங்குகளிடம் கருணை காட்டினால், அவை நம்மை சின்னாபின்னமாக்கிக் கொன்று தின்று விடும். இந்த அடிமை நாய்களுக்கு இடங்கொடுத்தால், நம் கதி அதோ கதிதான். காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமில்லையா? அதே போல, விலங்குகளுக்குச் சமமான இந்த அடிமைகளையும் நடத்தினால்தான் இவர்கள் அடங்கிக் கிடப்பர்!'' என்றான்.சக்கரவர்த்தி மகேந்திரவர்மர் அதற்குமேல் அவ்விஷயத்தைப்பற்றிப் பேச விரும்பாதவராக, பேச்சை வேறு திசையில் திருப்பினார். சபை கலைந்தது. மொட்டையனுடன் அரண்மனைக்குள் சென்றார்.சக்கரவர்த்தியின் திருமகள்கள், ராஜகுமாரிகள் மூவரும் தங்கள் சகோதரனைக் காண ஆசைகளை வளர்த்தவர்களுக்கு, வரப்போகும் ராஜகுமாரனைப் பற்றி எப்படியெல்லாமோ எண்ணியவர்களுக்கு மொட்டையனைக் கண்டதும் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. தோற்றம் தான் அப்படி; நடத்தையாவது கண்ணியமாக இருக்கக் கூடாதா? அத்தனை பேர் கூடியிருந்த சபையில் தன் வேலைக்காரனை எவ்வளவு கேவலமாக நடத்தினான்...வேலைக்காரனா அந்த அழகிய வாலிபன்? மூன்று இளவரசிகளின் பேச்செல்லாம், எண்ணமெல்லாம் இப்போது இந்த வசீகரமான வாலிபனைப் பற்றியே இருந்தது. ''எனக்கென்னவோ நம்ம சித்தப்பாவோட மகன் இந்த மொட்டைத் தலையனாக இருக்காதுன்னு தோணுது! தலையிலே முடி இல்லாததோட கூட, மூளையுமே இல்லையோன்னு நினைக்கிறேன்,'' என்றாள் மூத்த இளவரசி திலோத்தம்மா.''அவனோட பார்வையே சரியில்லே அக்கா. மந்திரவாதி சூனியக்காரன் போல கொடுமையான அந்தக் கண்களைக் காணவே நடுக்கமா இருக்கு. நமக்குச் சகோதரன் இல்லையென்று ரொம்ப ஏக்கமாக இருந்தது. சித்தப்பாவோட பிள்ளை சகோதரனாக வரப்போகிறான் என்று எத்தனை சந்தோஷமாக இருந்தேன். ம்...!'' என்று வேதனைப் பெருமூச்சு விட்டாள் திலகவதி.''அக்கா, அந்த மொட்டைத் தலையோட அடிமையாக, குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தானே அந்த அழகிய வாலிபன், அவன் நம் சித்தப்பாவோட பிள்ளையா இருக்கக்கூடாதா? அந்த அழகிய அடிமையிடந்தான், 'ராஜகளை' இருப்பதாக நினைக்கிறேன் நான். ''நாமோ நம் சித்தப்பாவையோ அவருடைய பிள்ளைகளையோ பார்த்ததில்லை. ஆகவே, இதில் ஏதாவது சூது இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. என்னதான் இருக்கட்டும் ஒரு ராஜகுமாரன் இப்படியா நடந்துப்பான்? சித்தப்பாவோட கடிதத்தை மட்டுமே வைத்து இந்த மொட்டைத் தலையனை நாம் எப்படி அரசகுமாரன் என்று நம்புவது?'' என்றாள் கடைக்குட்டியான திவ்யா.- தொடரும்...