தலைவர் குரங்கு!
திருப்போரூர் காட்டில், பலவகை மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அவை, தலைவரைத் தேர்ந்தெடுக்க மலையடிவாரத்தில் கூடின. பறவையினங்கள் சிலவும், அதில் பங்கேற்றன. 'தங்களைத்தான் தேர்வு செய்வர்' என்று நம்பிய, சிங்கம், புலி, யானைகள் அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. காட்டுக்கே ராஜா என்று சொல்லும் சிங்கத்தையோ, பாயும் வேங்கையையோ, பலசாலி யானையையோ தான் தலைவராக்க வேண்டும் என்றது, நரி. மற்ற மிருகங்கள், இதை காதில் வாங்கவில்லை. தலைவர் பதவிக்கு, குரங்கை முன் மொழிந்தது கரடி; ஓநாய், வழி மொழிந்தது. இந்த பதவிக்கு, குரங்கு தகுதியானது அல்ல என்பதே நரியின் எண்ணம்.'மரங்களில் தாவி, தலைகீழாகத் தொங்கி, விளையாட்டுக் காட்டினால் மட்டும் போதுமா... புத்தி வேண்டாமா...' என்று விமர்ச்சித்த நரி, குரங்கின் தகுதி குறைவை நிரூபிக்க சபதம் ஏற்றது.ஒரு நாள் -காட்டில், வேடனைச் சந்தித்த நரி, 'ஒரு மரத்தின் அடியில், வலையை விரித்து வை. அதில், குரங்கை விழ வைக்கிறேன்...' என்று கூறியது. 'குரங்கு கிடைத்தால், வித்தை காட்டி பணம் சேர்க்கலாம்' என்று சம்மதித்தான், வேடன்.மரத்தின் அருகே, வலையை விரித்து மறைந்து கொண்டான். அப்போது, 'குரங்காரே... சற்று தொலைவில் குருவிக் கூட்டில் புகுந்த பாம்பு, அதன் குஞ்சுகளை தின்று விட்டது. குஞ்சுகளை இழந்து தவிக்கும் குருவிகளுக்கு ஆறுதல் சொல்ல, காட்டின் தலைவரான தாங்கள் வர வேண்டும்...' என்று தந்திரமாக அழைத்தது நரி.கண்ணீர் வடித்தபடி, நரியுடன் புறப்பட்டது, குரங்கு.மரத்தை அடைந்ததும், 'தலைவரே... மேலே பாருங்கள்... துக்கம் விசாரிக்கப் போவதால் தாவிக் குதிக்காதீர்; குருவிகள் தவறாக எண்ணக்கூடும். மெதுவாக மரத்தில் ஏறி ஆறுதல் கூறுங்கள்...' என்றது, நரி.இதை நம்பிய குரங்கு, சிந்திக்காமல் வேடன் விரித்திருந்த வலையில் சிக்கியது. கடுமையாக முயன்றும், தப்ப முடியாமல் தவித்தது. வேகமாக ஓடிய நரி, எல்லா மிருகங்களையும் அங்கு அழைத்து வந்தது. தலைவர் குரங்கு, வலையில் சிக்கித் தவிப்பதை பார்த்த மிருகங்கள், 'என்ன நடந்தது...' என்று விசாரித்தன.அப்போது நரி, 'முன் யோசனை இல்லாமல், வலையில் சிக்கி ஆபத்தைக் தேடிக் கொண்டது குரங்கு... இந்த மிருகத்தால், நமக்கு வழி காட்ட முடியுமா...' என்று கேட்டது. நரியின் கருத்தை எல்லா மிருகங்களும் ஏற்றன. வலையில் சிக்கிய குரங்கை, மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றான் வேடன்.குட்டீஸ்... தலைமை பொறுப்பு என்பது புத்திசாலித்தனம் மிக்கது. உரிய பயிற்சியிருந்தால் மட்டுமே அந்த பணியை செய்ய முடியும்.