உள்ளூர் செய்திகள்

வாய்ப்பேச்சு வீரம்!

ஒரு காட்டில் பல விதமான விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த விலங்குகளுக்கிடையே ஒரு கொழுத்த மான் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாகவும், சதைப் பிடிப்புடனும் இருந்ததால் அந்தக் காட்டில் வசிக்கும் விலங்கினங்களுள், தானே அதிக பலசாலி என்ற இறுமாப்பு அந்த மானுக்கு உண்டு.மான் குட்டிகளையும், முயல் போன்று பலவீனமான பயந்த விலங்குகளையும் மான் அடிக்கடி விரட்டியடிக்கும். அவற்றைக் காணும்போது தனது வலிமையைக் கண்டு அஞ்சியே அவை ஓடுவதாக நினைத்துக் கொண்டு மான் தற்பெருமை கொள்ளும்.ஒருநாள் காட்டில் ஒரு பக்கமாக ஒரு வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்தது. அகம்பாவம் பிடித்த மான் வேகமாக ஓடி வந்து ஆட்டை முட்டித் தொந்தரவு செய்தது. மானின் செயலைக் கண்டு எரிச்சலடைந்த ஆடு, ''நீ ஏன் எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாய். நான் என் உணவுக்காக இலை தழைகளை மேய்ந்து கொண்டிருக்கிறேன். இதனால் உனக்கு என்ன நஷ்டம்!'' என்று கேட்டது.''நான் இந்தக் காட்டிலே பலம் வாய்ந்த விலங்காகும். மற்ற எந்த விலங்காக இருந்தாலும் என்னிடம் அடங்கிப் போக வேண்டும். இல்லாவிடால் அந்த விலங்குடன் சண்டை பிடித்து வெற்றி கொள்வேன்!'' என்று மான் அகங்காரத் தொணியில் பதில் சொல்லிற்று.''உன்னிடம் அப்படியென்ன சிறப்பான தகுதியிருக்கிறது?'' என்று கேட்டது ஆடு.''எனக்குப் பிற விலங்கினங்களைக் குத்திக் கிழிக்கும் கொம்பு இருக்கிறது. காற்றிலும் விரைந்து செல்லும் கால் இருக்கிறது. மின்னலெனப் பாயும் மெல்லிய உடலுக்குரியவனாக நான் இருக்கிறேன். எனக்கிருக்கும் இந்தச் சிறப்பு வேறு யாருக்காவது உண்டா?'' என்று கம்பீரமான குரலில் கேட்டது மான்.அப்போது சற்றுத் தொலைவில் சில வேட்டை ஓநாய்கள் பயங்கரமாகக் குரைக்கும் ஓசை கேட்டது. அடுத்த கணமே மானின் முகத்தில் பீதியின் குறிகள் தென்பட்டன. வேட்டை நாய்களின் குரைப்பு ஒலி நெருங்கி வருவது போல இருந்தது. அவ்வளவுதான் மான் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்து விட்டது.அந்தக் காட்சியைக் கண்டு ஆடு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டது. வீரமோ, வேறு சிறப்பு தகுதிகளோ ஏதும் இல்லாத சிலர் உலகத்திலேயே தாங்கள்தான் சிறந்த வீரன் என்றோ, மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்றோ வாய்ச்சவடால் அடிப்பார்கள். ஆனால், தங்கள் வீரத்தை அல்லது சிறப்புத் தகுதியை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிடுவார்கள்.காரணமில்லாமல் தற்பெருமை பேசுவதால் ஒரு பயனும் விளையாது. சில சமயம் அதுவே பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !