விமி மன்னர்!
ஜர்ஸ்னா என்ற நாட்டை, மன்னர் விமிதன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். குடி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவரது சீரிய ஆட்சியின் மகிமை, தேவலோகத்திற்கு தெரிய வந்தது. அங்கு, கீர்தண்டி என்ற ரிஷி இருந்தார். அவர், விமிதனுக்கு மோட்சம் அளிக்க முடிவு செய்தார்.இருந்தாலும், சிறு சந்தேகம் இருந்தது. சோதனைக் காலங்களில், நேர்மையுடன் நடந்து, பொய் பேசாமல் இருப்பானா என்பதை அறிய நினைத்தார். உடனே, புலவர் வேடம் தரித்து, அரண்மனைக்குச் சென்றார்; அவரை இன்முகத்துடன் வரவேற்ற விமிதன், 'புலவரே... தாங்கள் வந்த நோக்கம் என்ன... அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்...' என்றார்.'மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்; உன்னிடம், ஒரு மாபெரும் பரிசைப் பெற வேண்டியே வந்துள்ளேன்; அந்த பரிசை உடனடியாக, தருவாய் என நம்புகிறேன்...' என்றார் புலவர்.'தாங்கள், பேராற்றல் மிக்கவர் போன்றே தெரிகிறது. முகத்தில் தெய்வீக ஒளி வீசுகிறது... உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், நிறைவேற்றி வைப்பது, என் கடமை...' 'மன்னரே... உன் பணிவு மிகவும் பிடித்திருக்கிறது; அதே நேரத்தில், உன் நற்குணத்திற்கு, சவால் விடும் விதத்தில் ஒன்று கேட்க தோன்றுகிறது; உன் முன்னோர், என் போன்ற புலவர்களுக்கு, நாடு, நகரத்தை, பரிசாக கொடுத்திருக்கின்றனர்... அதுபோல், நானும், இந்நாட்டை பரிசாக கேட்கிறேன்; நீ சத்தியவானாக இருந்தால் நிறைவேற்று பார்க்கலாம்...' புலவரின் பேச்சைக் கேட்டதும், சபையோர் திடுக்கிட்டனர்; மன்னர் மட்டும் தனக்குள் சிரித்தபடி, உடனடியாக கிரீடத்தை, புலவர் தலையில் சூட்டி, அரியணையில் அமர வைத்தார். இதைக் கண்ட அவையோர், 'மன்னா... தங்களுக்கு என்ன நேர்ந்தது... இந்த புலவருக்கு மன்னர் பதவியா... தாங்கள் செய்வது அறிவற்ற செயல்...' என்று கூச்சலிட்டனர்.'இதோ பாருங்கள்... எது அறிவற்ற செயல், எது அறிவான செயல் என்பதெல்லாம், எனக்குத் தெரியும். அமைதியாக இருங்கள்; என் சத்தியத்திற்கு இழிவு வராத வகையில் நடந்துக் கொள்கிறேன்; இனிமேல், இந்நாட்டுக்கு, புலவர் தான் மன்னர்...' என்று கூறியபடி வெளியேறினார் விமிதன்.கம்பீரமாக அரியணையில் அமர்ந்த புலவர், சபை நடவடிக்கைகளை கவனித்தார். மன்னரும், ராணியும் சாதாரண குடிமக்கள் போல உடையணிந்து நாட்டை விட்டு வெளியேறினர்.இதை கேள்வியுற்ற புலவர், இருவரையும் அழைத்து வர கூறினார். காவலர்கள், அவர்களை அவையில் நிறுத்தியதும், 'விமிதனே... உன் நிலையைப் பார்த்தால், மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நீ சத்தியத்தையும், தர்மத்தையும் ஒருமுறை மட்டும் மீறினால், உன் நாட்டை திருப்பி தருகிறேன்...' என்றார்.'புலவர் பெருமானே... நாட்டை தந்ததுடன், என் உயிரையும் தருகிறேன்; ஆனால், சத்தியத்தையும், தர்மத்தையும் மீற மாட்டேன்...' என்றார் விமிதன். 'என் பேச்சுக்கு கட்டுப்படாத நீயும், உன் மனைவியும் பல துன்பங்களை அனுபவிக்க போகிறீர்கள். இனிமேல், இந்த நாட்டில் இருக்க கூடாது; காட்டில் தான் குடியிருக்க வேண்டும்; இது, புதிய மன்னரான என் கட்டளை...' என்றார் புலவர்.இதை ஏற்று, மனைவியுடன் காட்டில் ஒரு குடிசை அமைத்து தங்கினார் விமிதன். காய், கனிகளை பறித்து கொடுத்தார். அதை அரண்மனையில் கிடைத்த அறுசுவை உணவாக நினைத்தாள் ராணி.ஒரு நாள் -காட்டில், கடும் மழை பெய்தது; வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இருவரும் வெள்ளத்தில் சிக்கினர்; ஒரு மரத்தை தெப்பமாக பிடித்து, தப்ப போராடினர்.ராணியை வெள்ளம் இழுத்துச் சென்றது; விமிதன் மயங்கியபடி, வெள்ளத்தில் மிதந்தார்.கண் விழித்த போது, ஒரு தீவில் தன்னந்தனியாக இருப்பதை உணர்ந்தார். அங்கேயே சுற்றி திரிந்தார்; பசி வாட்டியது. உணவு எதுவும் கிடைக்கவில்லை. தாகம் தீர, கடல் தண்ணீரை குடிப்பதை தவிர, வேறு வழியில்லை. இரவில், கடுங்குளிர் வாட்டியது; நடுங்கி தவித்தார். 'விமிதா... உன் பதவியையும் பறித்துக் கொண்டவர், சாதாரண புலவர் அல்ல; நீ மட்டும் அவருக்கு வளைந்து கொடுத்து, ஒரே ஒரு முறை சத்தியம் தவறினால், ராணி உனக்கு கிடைத்து விடுவாள். இழந்த நாடும் கிடைத்து விடும்; உன் பிடிவாதத்தை தளர்த்து' என்றது ஒரு குரல்.'மனமே... என்னை, யார் என்று நினைத்தாய்... நான் என்றுமே சத்தியம் தவறியதில்லை. இப்போதும் அவ்வாறு நடக்கப் போவதில்லை. மனமே... நீ ஒரு குரங்கு; என்னை அலைக்கழித்து மிருகமாக்க நினைக்கிறாய்... 'இதை விட, பெரிய சோதனைகள் வந்தாலும், சத்தியத்தை மீற மாட்டேன். என் கெட்ட எண்ணத்தை போக்கும் வழி எனக்கு தெரியும்...' என்று சத்தமாக கூறியபடி, கடற்கரையில் அமர்ந்து, தியானம் செய்தார்.அந்த நேரத்தில், வானத்தில் ஒரு தெய்வீக ஒளி வீசுயது. அந்த புலவர், ரிஷி வடிவில் வருவதைக் கண்டு திகைத்தார் விமிதன்.அவரை அன்புடன் நோக்கிய கீர்தண்டி ரிஷி, 'நீ சத்தியத்தை மீறாதது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது; உன்னைப் போன்ற உத்தமனை, இந்த உலகத்தில் காண்பது அரிது; உன்னை சோதித்ததற்காக வெட்கப்படுகிறேன்... 'உன்னிடம் பறித்துக் கொண்டவற்றை தந்து விடுகிறேன். சிறப்பாக ஆட்சி செய்த பின், சொர்க்கம் வந்தடைவாய்...' என்று வாழ்த்தி மறைந்தார்.மறு நொடியில், சபையில் ராணியுடன் அமர்ந்திருந்தார் விமிதன். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்; உண்மையும், சத்தியமும் தவறாத மன்னரை பாராட்டினர்.குட்டீஸ்... உண்மையும், சத்தியமும் தான் உலகை காக்கின்றன. 'வாய்மையே வெல்லும்' என்று நம் அரசு முத்திரையில் பதித்துள்ள வாசகத்தை மனதில் ஏற்று வாழுங்கள்.