உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, கேக் உணவு பிரதானம். அது உருவான வரலாறை பார்ப்போம்...மாவு கலவையால் செய்யப்பட்ட உணவை ஐரோப்பியர், 'கேகே' என்பர்; இந்த சொல்லில் இருந்துதான், 'கேக்' தோன்றியது. கிரேக்கர்கள், 'பிளேகஸ்' என்றனர். அதாவது தட்டை வடிவ மாவு பொருள் என பொருள். மென்மையாக அரைக்கப்பட்ட, கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது, கேக். பழங்காலத்தில் செல்வந்தர் வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடக்கும் உபவாச நிகழ்வின் போது, எளிதில் ஜீரணமாகும் உணவான ஓட்ஸ் தானிய கஞ்சியை தயாரித்து வழங்கும் வழக்கம் இருந்தது. பின், அந்த கஞ்சியில், உலர் திராட்சை, தேன், முந்திரி போன்ற சுவைமிகு பொருட்களை சேர்த்தனர். தொடர்ந்து, ஓட்ஸ் தானியத்துக்கு பதிலாக, கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் முட்டை கலந்து உணவு செய்யும் வழக்கம் உருவானது. இதை பொது நிகழ்வுகளில் பரிமாறும் வழக்கம், 16ம் நுாற்றாண்டில் துவங்கியது.செல்வந்தர்கள் வீட்டில், ஆரஞ்சு, திராட்சை, பாதாம் பயன்படுத்தி சிறப்பு கேக் செய்தனர்.மேற்கு ஆசியா பெத்தலகேமில் பிறந்த குழந்தை இயேசுவை பார்க்க மூன்று மன்னர்கள், வாசனை பொருட்களுடன் வந்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனால், கேக் தயாரிக்கும் போது வாசனை பொருட்களை சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது.கிறிஸ்துமஸ் என்றாலே, பழங்களால் தயாரிக்கும், 'ப்ளம் கேக்' தான் பிரபலம்; பண்டிகைக்கு முன், உலர்ந்த பழங்களை, ஒயினுடன் கலந்து, காற்று புகாமல், நொதிக்க வைத்து, கேக் செய்யப்பட்டது.தற்போது பிரபலமாக உள்ள, 'பிளாக் பாரஸ்ட்' வகை கேக், 16ம் நுாற்றாண்டில் உருவானது. ஐரோப்பிய நாடான ஜெர்மனி, செக்வர்வால்ட் என்ற இடத்தில் முதலில் இது தயாரானது; சாக்லேட் கலந்து தயாரிக்கப்பட்டது, பிளாக் பாரஸ்ட் வகை.இந்த பெயர் காரணம் வினோதமானது. மேற்புறத்தில் உள்ள, 'கிரீம்' அடர் கருமை நிறத்தில், அடர்ந்த ஊசி இலைக் காடு போல இருப்பதால், 'பிளாக் பாரஸ்ட்' என அழைக்கப்படுகிறது.* முதன் முதலாக பிறந்த நாளுக்கு, கேக் தரும் வழக்கம், கி.பி.1785ல் துவங்கியது* சர்வதேச கேக் தினம், நவம்பர் 26ல் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில், சுவைமிகு கேக் உணவை பகிர்ந்து மகிழ்வோம்.- எம்.விக்னேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !