உள்ளூர் செய்திகள்

நிறமும் மணமும்!

தாவரங்களில் புதிர்களை ஆராய்ந்து, விந்தைகளை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் தாவரவியல் அறிஞர் திருவேங்கடம் ராஜேந்திரம் சேஷாத்திரி. சுருக்கமாக, டி.ஆர்.சேஷாத்திரி என்பர். திருச்சி மாவட்டம், குளித்தலையில், பிப்., 3, 1900ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். பள்ளி படிப்பை திருச்சியில் முடித்தார். ஆன்மிகம் மற்றும் அறிவியலில் நாட்டம் கொண்டார்.சென்னை, மாநிலக் கல்லுாரியில், அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில், 1925ல் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராபர்ட் ராபின்சன் மேற்பார்வையில், பூக்கள் சிந்தும் மணத்தில் உள்ள வேதி பொருட்களின் தன்மை பற்றி ஆராய்ந்து, பிஎச்.டி., பட்டம் பெற்றார். இந்தியா திரும்பி, கோவை வேளாண் ஆராய்ச்சி மைய பணியில் சேர்ந்தார். நுாற்றுக்கணக்கான தவார இனங்களை ஆராய்ந்ததுடன், அங்கு வேதியியல் பாடப்பிரிவை துவக்கவும் காரணமாக இருந்தார். டில்லி பல்கலைக்கழகத்தில், 1949ல் வேதியியல் பாட துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.சிலவகைச் செடிகள் மருத்துவத்திற்காக பயன்படுகின்றன; சில விஷமாக இருக்கின்றன. இந்த மாறுபாடுகள் பற்றி ஆராய்ந்து, தாவரங்களின் இன்றியமையா தன்மையை, உலகிற்கு உணர்த்தினார்.மஞ்சள், வெள்ளை, ஊதா, சிவப்பு என, வண்ணங்களால் பூக்கள் மிளர்கின்றன. இந்த நிறங்களில் உள்ள கூட்டுப் பொருட்கள் பற்றியும் ஆராய்ந்தார். ஆராய்ச்சிகளின் விளைவாக, தாவரவியல், உயிர் வேதியியல் துறைகளில், 1,100 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.தாவரங்களை ஆராய்ந்து, ரசாயன கூட்டுப் பொருட்களை கண்டறிந்தார். அவற்றை உணவுப் பொருட்களாக உருவாக்கினார். உயிர் வேதியியல் துறையில், 160 ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார். வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக, இங்கிலாந்து, லண்டன் ராயல் சங்க உறுப்பினராக, 1960ல் நியமிக்கப்பட்டார். இந்திய அரசு, 1963ல், 'பத்மபூஷன்' விருது வழங்கி கவுரவித்தது.பூக்களின் நிறங்கள், மணம் பற்றி ஆராய்ந்து பல வகை வேதி கூட்டுப்பொருட்களை உருவாக்கிய மேதை சேஷாத்திரி, செப்., 27, 1975ல் மறைந்தார்.பூக்களின் நிறங்களும், நறுமணமும், எப்போதும் அவரை நினைக்க வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !