தளபதி!
அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவரது காலம் 1732-1799. இவரே, 'அமெரிக்கக் குடியரசின் தந்தை' எனப் போற்றப்படுகிறவர். அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள வேக்பீல்டு என்ற ஊரில் 1732ல் பிறந்தார். இவர் இளமையில் கல்வி கற்க வாய்ப்பில்லாதவர். அதோடு தனது 11ம் வயதில் தந்தையை இழந்தார். தனது 15ம் வயதில் நில அளவை கணக்கிடும் முறையைக் கற்றுக் கொண்டார்.1752ல் இவருக்கு சகோதரர் முறையுள்ள ஒருவரின் மரணத்தால், அவரது 2500 ஏக்கர் நிலம் இவருக்கு கிடைத்தது. இவர் வர்ஜீனியா மாநில படையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். 1754ல் பிரஞ்சுக்காரர்களும், சிவப்பு இந்தியர்களும் சேர்ந்து மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நடத்தினர். வாஷிங்டன் ஒரு படைக்குத் தலைமை தாங்கி, அவர்களைத் தோற்கடித்தார். இவ்வெற்றியால் இவருக்கு பேரும், புகழும், செல்வாக்கும் கிடைத்தது. இதன் அடிப்படையில் வர்ஜீனியா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்றவர். 1759ல் செல்வந்தரான, ஓர் இளம் விதவையைத் திருமணம் செய்து கொண்டார்.அமெரிக்கா ஒரு குடியேற்ற நாடு. பெரும்பாலும் இங்கிலாந்து வழிவந்தவர்கள் அங்குள்ளனர். ஆங்கில ஆட்சியாளருக்கும், குடியேற்றங்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட காலம் இது. இதனால் தனிசுதந்திர உணர்வு தோன்றியது. இதற்காக 1755ல் அமெரிக்கப் படைகளுக்கு இவர் தலைமைத் தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1783 வரை போர் நடைபெற்றது.இவர் சிறந்த போர்த்தளபதி; போர் பயிற்சியாளர். தனது படைவீரர்களுக்கு நல்ல பயிற்சி அளித்தார். இதன் மூலம் வெற்றியும் பெற்றார். விடுதலை பெற்ற 13 அமெரிக்க குடியேற்றப் பகுதியும் ஒன்று சேர்ந்து, 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என்ற பெயரில் ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. 1789ல் முதல் குடியரசுத் தலைவராக வாஷிங்டன் தேர்வும் பெற்றார். மொத்தம் எட்டு வருடங்கள் வாஷிங்டன் இப்பதவியை வகித்தார்.இவரது பணிக்காலத்தில் நேர்மையான நிர்வாகம் நடைபெற வழிவகுத்தார். மக்களின் நன்மை ஒன்றையே கருதி வாழ்ந்தார். இரண்டு முறை பதவி வகித்தது மட்டுமில்லாது, மக்கள் மூன்றாம் முறையும் இவரை ஜனாதிபதி ஆக்கவே விரும்பினர்.ஆனால், வாஷிங்டன் மற்றவர்க்கு வழிவிட விரும்பி, அதனை ஏற்கவில்லை. தனது சொந்த ஊர் திரும்பினார். அங்கே 1799 டிசம்பர் 14ல் காலமானார். இவரது நினைவாக அமெரிக்க மாநிலம் ஒன்றிற்கும், தலை நகருக்கும் வாஷிங்டன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.யு.எஸ்.ஏ., என்கிற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதயம் இவரால் நிகழ்ந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து, போரிட்டு சுதந்திரம் பெற்றுத்தந்தார். ஜூலை 4, 1776ல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தாகியது.***