உள்ளூர் செய்திகள்

கடவுளுக்காக கோப்பை

கடவுள் யார் தெரியுமா? நம் சச்சின் டெண்டுல்கர் தான். உலகின் பெரும்பாலான ரிக்கார்டுகள் இவர் வசம் இருப்பதாலும், இவர் கிரிக்கெட்டில் இருக்கும் ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு ரிக்கார்டு உடைவதாலும் இவரை உலகமே ' காட் ஆப் கிரிக்கெட்' என்கிறது.அவருடைய நீண்ட நாள் ஆசை, தான் ஆடும்போது இந்தியா 'உலக கோப்பையை' வெல்ல வேண்டும், என்பதுதான். நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவருடன் துணை நின்று இதனை சாதித்தனர். இன்று, இந்தியாவே இந்த உலக கோப்பையை சச்சின் டெண்டுல்கரின் கைகளில் கொடுத்து ஆனந்தத்துடன் அழகு பார்க்கிறது.உலக கோப்பை கிரிக்கெட்!உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. மும்பையில் ஏப்ரல் 2 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பின் இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.இரண்டு முறை டாஸ்!உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தமுறை இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. முதல் முறை இந்திய கேப்டன் தோனி நாணயத்தை சுண்டியபோது, இலங்கை கேப்டன் சங்ககரா தலை கேட்டாரா அல்லது பூ கேட்டாரா என்பது யாருக்கும் சரியாக கேட்காததால் குழப்பம் ஏற்பட்டது. இதையெடுத்து மேட்ச் ரெப்ரிஜெப் குரோல், தோனி சங்ககரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன்பின்பு மீண்டும் டாஸ் போடுவது என முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக டாஸ் போட்ட போது அதை சங்ககரா வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.இறுதிப்போட்டி நிலவரம்இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன் கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை நம் இந்தியா வென்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இலங்கை நிர்ணயித்த 275 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தனது முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்தது. இதையெடுத்து ஜோடி சேர்ந்த கம்பீரும், கோலியும் நிதானமாக விளையாடினர்.கோலி 35 ரன்களில் வெளியேறினார். இதையெடுத்து தோனி கம்பீருடன் ஜோடி சேர்ந்தார். பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய கம்பீர் 56 பந்துகளில் அரை சதமடித்தார். வழக்கத்துக்கு மாறாக முன்வரிசையில் களம் கண்ட தோனி விக்கெட் விழாமல் பார்த்து கொண்டார். சிறப்பாக ஆடிய தோனி 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதிரடியாக விளையாடிய தோனி இந்திய அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றார். 49-வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்சரை விளாசி இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார் தோனி. அவர் 91 எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதி வரை இருந்தார். பந்துவீச்சில் இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், வலுவாக நிலைத்த பேட்ஸ்மேன்களால் வெற்றியை ருசித்தது.சொந்த மண்ணில் முதல் முறை!இந்தமுறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இதற்கு முன் 1996-ம் ஆண்டு போட்டியை நடத்திய இலங்கை வென்றிருந்தாலும், இறுதி ஆட்டம் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது குறிப்படத்தக்கது.சச்சின் கனவு நனவாக்கப்பட்டது!6-வது உலக கோப்பையில் விளையாடிய சச்சின், மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் நீண்ட நாள் கோப்பை கனவு நனவானது.முதலிடத்தில் இந்தியா!ஒருநாள் கிரிக்கெட் இருபது ஓவர் கிரிக்கெட் என இரண்டிலும் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார் தோனி. டெஸ்ட் அரங்கிலும், அவரது தலைமையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.பெருமைமிக்க நாள்!'இந்தியா கோப்பையை வென்ற நாள்' என் வாழ்வின் பெருமைமிக்க நாள் என்றும், மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக வீரர்களுக்கு என் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று உணர்ச்சி பொங்க கூறினார் சச்சின்.இந்தியா வெற்றிபெற்றதும் சச்சினை சக வீரர் யூசுப்பதான் தனது தோளில் தூக்கி வைத்து மைதானத்தில் வலம் வந்தார். அப்போது சச்சின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டது. அது குறித்து அவரிடம் கேட்டபோது,'அது ஆனந்த கண்ணீர் நாங்கள் எல்லாரும் உற்சாகத்தில் மேலும், கீழும் குதித்தபோது மெய்மறந்துவிட்டேன். குறிப்பாக சாகச நிபுணர் மைக் ஹார்னுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதே போல், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் பேடி அப்டன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதற்கு கிடைத்த வெற்றி இது' என்றார்.மூன்றாவது முறை!இந்த உலக கோப்பையையும் சேர்த்து 10 உலகக் கோப்பை போட்டிகளில் 3 முறை மட்டுமே 2-வதாக விளையாடிய அணி வென்றுள்ளது. 1996-ல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுக்க இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வென்றது.1999-ல் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 132 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வாகை சூடியது. மற்ற எல்லா இறுதி ஆட்டங்களிலும் முதலில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன.ஹீரோயிச வெற்றி!உலகக் கோப்பை 2007 போட்டியில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவிய இந்தியா, இலங்கையிடம் தோல்வியுற்றதால் போட்டியிலிருந்து வெளியேறியது. இப்போது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வென்றதுடன் இறுதி போட்டி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா ஒரு ஹீரோ போல பதிலுக்கு பதில் செய்து வென்றது.நான்கு முறை ஆட்ட நாயகன்!இப்போட்டியில் யுவராஜ் சிங் 4 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதற்கு முன் ஒரே உலக கோப்பையில் 4 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்ற இலங்கை வீரர் அரவிந்த டிசில்வா (1996) தென் ஆப்பரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர் (1999) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். யுவராஜ் சிங்கால் கடைசி இரண்டு முக்கிய ஆட்டங்களில் சோபிக்க முடியவில்லை. ஆனால், தொடர் முழுக்க அடிக்கவே அடிக்காத தோனி கடைசி முக்கிய ஆட்டத்தில் நன்றாக அடித்தார். இறுதி போட்டியில் ஆட்ட நாயகனாக தோனி இருந்தார். உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை 362 ரன்களும், 15 விக்கெட்டுகளும் பெற்ற யுவராஜ் சிங் தட்டி சென்றார்.சச்சினுடன் கொண்டாடுவோம்!இந்த உலகக்கோப்பை வெற்றியை இந்தியா அதன் பெருமைமிகு பிள்ளையான சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிக்கிறது. சச்சினின் வாழ்வின் மிக முக்கிய நாளானது உலகக்கோப்பை வெற்றி நாள். சச்சினுடன் சேர்ந்து இந்தியர்களும், உலகக் கிரிக்கெட் ரசிகர்களும் இன்னும் 4 வருடங்கருக்கு 'சாம்பியன்-சாம்பியன்' என, கொண்டாடுவோம்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !