கப்சிப் கண்ணாயிரம்!
நான் திண்டுக்கல்லில் புகழ்பெற்ற பள்ளி ஒன்றில், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம். அப்பொழுதெல்லாம் மாணவர்கள் குறும்பு செய்தால், ஆசிரியர்கள் கடுமையான தண்டனை கொடுப்பர். எங்களது தமிழ் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சற்று குண்டான மாணவன் ஒருவன், பாடத்தை கவனிக்காமல் தன்னுடைய ஸ்கூல் பேக்கில் உள்ள பொருட்களை நோண்டிக் கொண்டிருந்தான். இதை கவனித்த எங்களது ஆசிரியர், அவனை வகுப்பறையின் நடுவில் நிற்க வைத்தார். ஏறத்தாழ, 40 மாணவர்களுடைய ஸ்கூல் பேக்கையும், அவனது இரண்டு கைகளையும் நீட்டச் செய்து அதில் மாட்டி வைக்கச் சொன்னார். அந்த மாணவன் கை வலி தங்காமல், 'இனிமேல் சேட்டை செய்ய மாட்டேன்... பாடத்தை ஒழுங்கா கவனிப்பேன்!' என்று கதறி அழுதான். 10 நிமிட நேரம் சென்ற பிறகு எங்களது பைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார் ஆசிரியர்.அதன் பிறகு தமிழ் பாட வகுப்பு என்றாலே எங்களது சேட்டைகளை மறந்துவிட்டு, 'கப்சிப் கண்ணாயிரம்' மாதிரி இருப்போம்னா பார்த்துக்கோங்களேன்!- கே.செந்தில்குமார், ராமநாதபுரம்.