உள்ளூர் செய்திகள்

அணையா விளக்கு!

சேலம் மாவட்டம், ஆத்துார், முல்லைவாடி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்தேன். அறிவியல் பாடம் என்றால் அலறி அடித்து ஓடி ஒளிந்த எனக்கு, எளிய பரிசோதனைகள் வழியாக, அழகாக புரிய வைத்தார், அறிவியல் ஆசிரியை வித்யா. வயல் வெளிக்கு அழைத்து சென்று மண்புழு, பட்டாம் பூச்சிகளை காட்டி நுணுக்கமாக கற்பித்தார். தண்ணீரின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.காளான் பற்றி பாடம் நடத்திய போது, 'நாய் குடை' என்ற ரகத்தை அறிமுகம் செய்தார். வினோத பெயர் என்பதால் கலகலப்புடன், 'டீச்சர்... நாய்க்கெல்லாம் குடை உண்டா...' என கேட்டேன். அதுபற்றி விளக்கமளித்து, பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைத்தார். கொரோனா தொற்று பரவியபோது, 'நுண்ணுயிரி என்பது என்ன... அது எப்படி உயிர் வாழும். தடுப்பூசி தயாரிப்பது எப்படி...' என நண்பர்கள் கேட்பர். அந்த ஆசிரியையிடம் பெற்ற பயிற்சியால், பொறுமையாக விளக்குவேன். அனைவரும் வியந்து கேட்பர். என் வயது, 41; அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை கட்டுரையாக எழுதியும், பேசியும் வருகிறேன். அதற்கு, அந்த ஆசிரியை போட்ட விதையே காரணம். துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றும் அவரை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க தவறுவதில்லை. அவர் தந்த அறிவியல் ஆர்வம் அணையாத விளக்காக ஒளிர்கிறது. - மோ.கணேசன், சென்னை.தொடர்புக்கு: 94442 96929


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !