சேவையின் விளக்கம்!
ராமநாதபுரம், செய்யது அம்மாள் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 11ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியர் பிரதாபன், ஆங்கில பாடமும் நடத்துவார். அன்று, 'தி மூன்' என்ற பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வெள்ளை நிற பேன்ட், சட்டை அணிந்து மிகவும் கச்சிதமாக இருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். திடீர் என, 'சர்வீஸ்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, தமிழில் பொருள் கூறக் கேட்டார். பதில் தெரிந்திருந்தும், உடனடியாக சொல்ல வரவில்லை. தவித்துக் கொண்டிருந்தேன். என் இடது காதைக் கிள்ளி, 'சர்வீஸ் என்றால், பணி, சேவை, தொண்டு' என, கற்பித்தார். அது காதில் ஒலித்தபடி இருக்கிறது. பின், அந்த சொல்லை எப்போது படித்தாலும், கேட்டாலும், பார்த்தாலும் அந்த ஆசிரியரின் முகம், நினைவில் வரும். அவரது புன்சிரிப்பும், சிவந்த மேனியும், மிடுக்கான நடையும் மறக்க முடியாதவை.இப்போது, என் வயது, 64; தமிழக அரசு புள்ளியியல் துறையில் ஆய்வாளராக சேர்ந்து, பணியில் உயர்ந்து ஓய்வு பெற்றேன். அந்த சம்பவத்தை இன்றும் மறக்க முடியவில்லை.- க.கதிரேசன், ராமநாதபுரம்.தொடர்புக்கு: 94425 46648