உள்ளூர் செய்திகள்

மரங்களின் ஆசைகள்!

முன்னொரு காலத்தில், ஒரு காட்டில் மூன்று மரங்கள் இருந்தன. அந்த மரங்கள் மலைச்சரிவில் உள்ள காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. எல்லாரையும் போல இந்த மரங்களுக்கும் சில கனவுகள் இருந்தன. தங்கள் கனவுகளை ஒன்றிடம் ஒன்று பகிர்ந்து கொண்டன. முதலாவது மரத்தின் கனவு இதுதான்.எப்போதாவாது நான் ஒரு பெரிய நகைப்பெட்டியாவேன். என் உள்ளே நிறைய ஆபரணங்களும், வைரங்களும், முத்துக்களும், தங்கமும், வெள்ளியும் இருக்கும். இதைக் கேட்டு இரண்டாவது மரம் சொன்னது.''நண்பர்களே, நான் என்றாவது ஒரு பெரிய மரக் கப்பலாவேன். ராஜாக்களையும், ராணிகளையும் சுமந்தவாறு, உலகம் முழுவதும் சுற்றி வருவேன்!'' என்றது.அடுத்ததாக மூன்றாவது மரம் சொன்னது.''இந்தக் காட்டிலேயே மிகவும் உயரமான மரமாக நான் மாறுவேன். மக்கள் என்னை வியப்புடன் பார்த்து நிற்பர். நான் சொர்க்கத்திற்கும், கடவுளுக்கும் எவ்வளவு பக்கத்தில் இருக்கிறேன் என்றறிந்து, அவர்கள் என்னை வணங்குவர்!'' என்றது.ஆண்டுகள் சென்றன. மரங்கள், தங்கள் கனவுகள் பலிப்பதற்காகக் காத்திருந்தன.ஒருநாள்-மரம் வெட்டிகள் சிலர் அங்கே வந்தனர். முதல் மரத்தைப் பார்த்து ஒருவன் கூறினான்.''இது நல்ல மரம் என்று தோன்றுகிறது. இந்த மரத்தை வெட்டி தச்சரிடம் விற்கலாம்!''மரத்தை வெட்டத் துவங்கினான். அந்த மரம் மகிழ்ச்சியடைந்தது. தச்சர் தன்னை ஒரு நகைப் பெட்டியாக மாற்றுவார் என்று நினைத்தது.இன்னொருவன், இரண்டாவது மரத்தைப் பார்த்து கூறினான்.''இது நல்ல உறுதியான மரம். இதை வெட்டி கப்பல் கட்டும் இடத்தில் கொடுக்கலாம்!'' என்றான்.அவன் இரண்டாவது மரத்தை வெட்டத் துவங்கினான். அந்த மரமும், தன் கனவு பலிக்கப்போவதை எண்ணி மகிழ்ந்தது.மூன்றாவது மரத்தின் பக்கத்தில் வந்த மற்றொருவன், அதைத் தட்டிப் பார்த்துச் சொன்னான்.''ஏதும் மரச் சாமான்கள் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதனால் எனக்கு இந்த மரம் போதும்!'' என்றான்.சொர்க்கத்தைத் தொடுமளவு, வானத்தைத் தொடுமளவு வளர வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாததை எண்ணி, மூன்றாவது மரம் பெரிதும் வருந்தியது. மரம் வெட்டி உடனே அதை வெட்டினான்.முதல் மரத்தை கால்நடைகளுக்கான தீவனப் பெட்டியாக மாற்றினார். இரண்டாவது மரத்தை கப்பலுக்குப் பதிலாக சிறு படகாக்கினர்; மூன்றாவது மரத்தை சிறு, சிறு துண்டுகளாக்கி ஒரு இருண்ட மூலையில் போட்டு வைத்தார். 'தங்கள் கனவுகள் பலிக்கவில்லையே...' என்று மூன்று மரங்களும் துயருற்றன. சிறிது காலத்திற்குப் பிறகு, மரங்கள் தங்கள் லட்சியக் கனவுகளை மறந்துவிட்டன.ஒருநாள் தீவனப் பெட்டி வைத்திருந்த மாட்டுத் தொழுவத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அந்தப் பெண் அங்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையை அவர்கள், முதலாம் மரத்தால் செய்த அந்த தீவனப் பெட்டியில், வைக்கோல் மெத்தை விரித்துப் படுக்க வைத்தனர். அப்போது அந்த மரம், உலகத்திலேயே மிகப் பெரிய செல்வத்தை வைத்திருக்கும் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைத்திருப்பதைப் புரிந்துகொண்டது. உலகத்தையே மீட்க வந்த இயேசுவை தான் சுமந்திருப்பதை எண்ணி மகிழ்ந்தது.மேலும், பல வருடங்கள் கடந்தன. இரண்டாவது மரத்தில் செய்த படகில் கொஞ்சம் பேர் கடலில் பயணம் செய்தனர்.திடீரென்று புயலடித்தது. படகு அங்கும், இங்கும் ஆடியது. தன்னால் இந்தப் பயணிகளைப் பாதுகாக்க முடியாதோ... என்று நினைத்து, வேதனைப்பட்டது. அப்போது அந்தப் பயணிகள், படகில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரைத் தட்டி எழுப்பினர். அவர் எழுந்தபடியே சொன்னார்.''கடலே... இரையாதே சும்மாயிரு...'' என்றார்.பட்டென்று காற்று ஓய்ந்து, கடல் அமைதியடைந்தது. அப்போது அந்த மரத்திற்கு, தான் இயேசு ஆண்டவரை சுமந்துகொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது.பல வருடங்கள் சென்றன. சில மனிதர்கள், யாருக்கும் தேவைப்படாமல் கிடந்த மூன்றாவது மரத்தின் துண்டுகளை வெட்டி ஒரு மரச் சிலுவை செய்தனர்.ஒருவர் அந்தச் சிலுவையைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு தெருக்களில் தள்ளாடித் தடுமாறி நடந்து சென்றார். சிலர் அவரை அடித்துத் துன்புறுத்தினர். சிலர் அவரைத் திட்டினர். மிகச் சிலர் மட்டுமே அவர் படும் இன்னல்களைப் பார்த்து துயரம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதனர். கடைசியில் ஒரு குன்றின் உச்சியில் அவரை அந்த மரச் சிலுவையில் வைத்து ஆணியடித்தனர். தன் மீது ஆணியடித்து அறையப்பட்டது, இயேசு ஆண்டவர் என்ற உண்மை அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தது.அப்படி அந்த மூன்று மரங்களின் ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றினார்.நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லையே என்று கவலைப்படாதீங்க... நீங்கள் கனவு காண்பதை விட சிறப்பானதை கடவுள் உங்களுக்கு தருவார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !