உள்ளூர் செய்திகள்

வைர மோதிரம்!

மோகன் பெட்டியுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தான். ரயிலில் இருந்து அவன் தங்கை சாந்தா இறங்கி வந்தாள். அவளைக் கண்டதும் மோகன் திகைப்புடன், ''வா! சாந்தா! பொங்கல் சமயத்தில் நீ உன் வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்து இருக்கிறாயே! என்ன விஷயம்?'' என்று கேட்டான்.அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டே, ''எல்லாம் உனக்குத் தெரிந்த விஷயம்தான் அண்ணா! என் கணவருக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் வாங்கித் தருவதாகச் சொன்ன நீ, சொன்னபடி வாங்கிக் கொடுக்கவில்லையாம். அதனால் பொங்கலுக்கு வைர மோதிரம் வாங்கிக் கொடுத்தால்தான் நான் திரும்பி வர வேண்டுமாம். இல்லாவிட்டால் உன் பிறந்த வீட்டிலேயே நீ இருந்து விடு, என்று கூறிய என் கணவர், என்னை ரயில் ஏற்றி அனுப்பி விட்டார்,'' என்று கண்ணீர் விட்டாள்.அதைக் கேட்டதும் மோகனுக்கு, 'பகீர்' என்றது.அவளுடைய கணவன் என்ன காரியம் செய்து இருக்கிறானோ, அதே காரியத்தைத்தான் அவனும் செய்து இருக்கிறான். அவனுடைய மாமனார் மூன்று ஆண்டுகளாக ஒரு மொபெட் சைக்கிள் வாங்கித் தருவதாக வாக்களித்து ஏமாற்றிக் கொண்டு இருந்தார். அதனால் கோபம் அடைந்த மோகன், தன் மனைவி லதாவை மாமனார் வீட்டுக்கு அனுப்பி, ''உன் அப்பாவிடம் மொபெட் வாங்கிக் கொண்டு வா! இல்லாவிட்டால், நீ உன் பிறந்த வீட்டிலேயே இருந்து விடு,'' என்று கூறி விட்டான்.மோகன் தன் மனைவியை மாமனார் வீட்டிற்கு அனுப்பியதைப் போல, இப்போது அவன் தங்கை சாந்தாவை, அவளுடைய கணவன் மோதிரம் வாங்கி வரும்படி அனுப்பி இருக்கிறான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளைந்து விட்டது.மோகன் மூளையில் இடிகள் வெடித்தன. சமாளித்து கொண்டான். தங்கையைப் பார்த்தான்.''சாந்தா! நீ கவலைப்படாதே, பிறந்த வீட்டுக்குப் போய் இருக்கும் உன் அண்ணியை நான் அழைத்துக் கொண்டு அடுத்த ரயிலிலேயே புறப்பட்டு வந்து விடுகிறேன். பிறகு உன் கணவருக்குப் போடுவதாகச் சொன்ன வைர மோதிரத்தை வாங்கிக் கொடுத்து உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன். நீ வீட்டுக்குப் போ!'' என்று கூறி, சாந்தாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ரயிலில் ஏறி மாமனார் வீட்டுக்குப் போனான்.அவனைக் கண்டதும், அவனுடைய மாமியார், தன் கணவரை அழைத்து, ''என்னங்க! மாப்பிள்ளை வந்து விட்டார். என் ஒரே சங்கிலியை விற்று அவருக்கு மொபெட் வாங்கி கொடுத்து விடுங்கள்,'' என்றாள்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த மோகன், ''எனக்கு மொபைட் வேண்டாம். உங்கள் மகள் லதா ஒருத்தியே போதும்,'' என்று கூறி, மனைவி லதாவை அழைத்துக் கொண்டு அடுத்த ரயிலிலேயே ஊருக்குக் கிளம்பி விட்டான்.மோகனின் மன மாற்றத்திற்குக் காரணம் புரியாமல், லதாவின் பெற்றோர் திகைத்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !