வைரச் சொற்கள்!
கோவை, டி.எ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில்,1982ல், 11ம் வகுப்பு படித்தேன். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் பாட ஆசிரியராக இருந்தார் ஆறுச்சாமி. அவரைப் போல் யாரும் பாடம் நடத்த முடியாது; அவ்வளவு அர்ப்பணிப்பு.பள்ளியில் தலைமையாசிரியரை கண்டித்து, 'ஸ்டிரைக்' செய்தனர் மாணவர்கள். இதன் காரணமாக, வகுப்புகள் நடக்கவில்லை. கட்டாயத்தால், நானும் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.கும்பலாக விளையாட்டு மைதானத்தில் கூடி எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டிருந்தோம். அப்போது, வராண்டாவில் நின்றபடி கனிவு, பாசத்துடனும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார், அந்த ஆசிரியர். கூட்டத்தில் ஒருவன், ஒருமையில் தரமற்ற சொற்களால் அவரை திட்டினான். எதுவும் பேசாமல், அங்கிருந்து அகன்றுவிட்டார். சில நாட்களுக்கு பின் போராட்டம் முடிந்தது. பள்ளி திறந்ததும் வகுப்பிற்கு வந்தவர் வழக்கம் போல் பாடம் நடத்தினார். மாணவர்களின் எதிர்காலம், படிப்பின் சிறப்பு, வாழ்க்கையை சிறப்பாக்கும் திட்டங்கள் பற்றி எல்லாம் கூறினார். மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியது மனதில் பதிந்தது. என் வயது, 57; அந்த ஆசிரியர் தந்த வைர வார்த்தைகளின் துணைகொண்டுதான், என்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டேன். அவரது பண்புமிக்க செயல்பாடு இன்றும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.- கே.ராஜகோபால், கோவை. தொடர்புக்கு: 94438 89283