டைனோ என் தோழன்! (10)
முன்கதை: பனிப்புயல், பூகம்பத்தில் சிக்கிய போது, பழங்காலத்தில் இறந்த டைனோசர் உடலை, சந்திரஜெயனும், மாமாவும் கண்டனர். அதில் ஒரு துண்டை வெட்டி பத்திரப்படுத்தினார் மாமா. அவர்களை மீட்க வந்த மார்ஷல்கள் கேள்விகள் கேட்டனர். இனி -''பனிப்புயல் மற்றும் பூகம்பத்தில் சிக்கி, உயிர் தப்பியுள்ளோம்; இதில் எதை கண்டெடுப்பது...'' என்றார் விஞ்ஞானி யோகிபாபு.''வாகனத்தில் ஏறுங்கள்...'' என்றபடி, புகைப்படம் ஒன்றை எடுத்தார் மார்ஷல். வீடியோ கேமராக்களுடன், 'பனிப்புயல் மற்றும் பூகம்பத்தில் இருந்து தப்பிய கதையை கூறுங்கள் யோகிபாபு...' என்றனர் உடன் வந்திருந்த செய்தியாளர்கள்.டைனோசர் பார்த்ததை விட்டு, மீதியை உணர்வுப் பூர்வமாக கூறினார் யோகிபாபு.''பனிப் பூகம்பத்தில் சிக்கியதால், பனி மீது வெறுப்பு வருகிறதா யோகிபாபு...'' என கேட்டார் செய்தியாளர்.''கூடுதல் ஆர்வம் வருகிறது; காரணம், நான் ஒரு சாகச விரும்பி; சாகசங்களுக்காக தான், பிரம்மச்சாரியாக வாழ்கிறேன்...'' ''இந்தியர்கள் மனபலம் உள்ளவர் என்பதை நிரூபித்து விட்டீர்...'' ''எங்களுக்கு ஆன்மிக பலம் அதிகம்...''பேட்டியளித்த பின், ஆராய்ச்சி நிலையத்துக்கு திரும்பினர்.'உங்களுக்கு ஆயுள் கெட்டி யோகிபாபு...' புன்னகையுடன் வரவேற்றனர் விஞ்ஞானிகள்.நலம் விசாரிப்பு மற்றும் வாழ்த்துகளை பெற்றதும், தனி அறைக்கு திரும்பினர். இடுப்பில் இருந்த டப்பாவை எடுத்தார்; ரத்தத்துடன் சிறு சதை துணுக்கைப் பார்த்து, ''என் ஆராய்ச்சியில் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறேன்...'' என்றார் யோகிபாபு.''எப்படி மாமா...'' என்றான் ஜெயன்.''டைனோசரை மீண்டும் உயிருடன் கொண்டு வரப் போகிறேன்; என் வெற்றி, இந்தியாவை மட்டும் சாரும்... நம் பயண திட்டத்தில் சிறு மாற்றம் இருக்கிறது...'' ''என்ன மாறுதல் மாமா...'' ''இன்று மாலையே இந்தியாவுக்கு புறப்படுகிறோம்...'' ''என்ன விஷயம்...'' ''எல்லா ரகசியங்களையும் சொல்லி விட முடியாது...'' ''யூகிக்க முடிகிறது... உங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள் மாமா...'' ''யூகித்தபடியே இரு... ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து விடுகிறேன்; டைனோசர் சாம்பிளை, யார் கண்ணிலும் படாமல் எடுத்து செல்ல வேண்டும்; தேச பக்தி ஜெயிக்க, சிறிது திருட்டு தனம் தப்பில்லை...'' பயணச் சுமைகளை பெட்டிக்குள் எடுத்து வைத்தனர்; இரவு உணவு முடித்த பின், சிராய்ப்பு காயத்திற்கு மருந்திட்டு, விமான நிலையத்துக்குள் பிரவேசித்தனர். பரிசோதனையில், டைனோசரின் சதை துணுக்கு சிக்கவில்லை. விமானம் புதுடில்லி வந்தது.அடுத்து, பெங்களூருவுக்கு விமானம் ஏறினர்.''மாமா... அன்டார்டிகாவில் இருக்க திட்டமிட்ட நாட்களை, ஆராய்ச்சி கூடத்தில் கழிக்கிறேன்... அனுமதிப்பீரா...'' என்றான் சந்திரஜெயன்.''தாராளமாக இரு...'' என்றார் யோகிபாபு.ஆராய்ச்சியில் ஒரு பூதம் கிளம்பி வரப் போவதை இருவரும் அறிந்திருக்கவில்லை! பெங்களூருவிலிருந்து, 40 கி.மீ., தொலைவில், போன்சாய் தோட்டத்தின் நடுவே, யோகிபாபுவின் ஆராய்ச்சிக் கூடம்; பார்க்க ரம்மியமாக காட்சியளித்தது!அதன் வாசலுக்கு சென்று, ''ஓபன் லில்லி புட்டன்ஸ்...'' என்றதும், கதவு திறந்தது.''வணக்கம் பாஸ்... ஆராய்ச்சி கூடம் உங்களை வரவேற்கிறது...'' என்றது ரோபோ மினி. அது ஒரு பெண் ரோபோ.அன்டார்டிகாவில் இருந்து எடுத்து வந்த, டைனோசரின் சதை துணுக்கை வைத்து, மரபியல் சங்கேத குறிப்புகளை பிரித்தெடுத்து மரபியல் வரைப்படம் தயாரித்தார் யோகிபாபு.மரபியல் வரைபடம் என்பது, ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., புரத அமைப்பு. ஒவ்வொரு உயிரினத்துக்கும், ஒரு மரபியல் வரைபடம் உண்டு; அவை புரதங்கள் சுழலும் படிக்கட்டு போல் காணப்படும்.ஒவ்வொரு மரபியல் சங்கேத குறிப்பையும், 'கோட் ஆன்' என்பர்; மரபியல் வரைப்படத்தை வைத்து, ஒரு உயிரினத்தை மீண்டும் உயிர்பிக்க முடியும்.டைனோசரின் மரபியல் வரைப்படத்தை கண்டறிந்தார் யோகிபாபு.''சூப்பர்... ப்ளூ பிரின்ட்டை எடுத்து விட்டேன்; இப்போது, என்னால் முழு டைனோசரை உருவாக்க முடியும்...'' என்றார் யோகிபாபு.''மீண்டும் டைனோசரை உருவாக்க எத்தனை நாளாகும் மாமா...''''30 நாளாகும்...''''தயாரிப்பை பார்த்து, ரசிக்க தயாராக இருக்கிறேன்...'' ''மரபியல் வரைப்படத்தில் இருந்து, ஒன்றை உயிர்ப்பது அல்வா கிண்டும் வேலையல்ல; இரவு, பகல் அயராது பாடுபட்டு, ஒரு சூன்யத்திலிருந்து உயிரை இழுத்து வர வேண்டும்...''கண் சிமிட்டியது மினி.- தொடரும்...- வஹித்தா நாசர்