உள்ளூர் செய்திகள்

ஊனம் கேலிப்பொருளல்ல...

தேனி மாவட்டம், சின்னமனுார், ஸ்ரீ கிருஷ்ணய்யர் உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!வகுப்பில் உடன் படித்த, சதக்கத்துல்லாவுடன் சண்டை போட்டேன்; செமையாக திட்டிக் கொண்டோம். என் மனம் ஆறவில்லை. தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணனிடம், 'கருவாயா' என, கேலி செய்வதாக புகார் செய்தேன். அவனை அழைத்து வர சொன்னார். மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றேன். அக்கறையாக விசாரித்தவரிடம் திக்கித் திணறியபடி, 'என்னை, 'கொன்ன வாயா' என்கிறான்...' என கண்ணீர் வடித்தான். புகார் கொடுத்தவனே குற்றவாளியாக நின்றேன். கடும் கோபத்தில் பிரம்பால், என்னை விளாசி தள்ளியவர், 'நிறத்தையோ, ஊனத்தையோ சுட்டிக்காட்டி, கேலி பேசுவது பெரும் குற்றம்...' என உணர்த்தி அனுப்பினார். பின், உயிர் நண்பர்கள் ஆகி விட்டோம். என் வயது, 71; மனதில் வீற்றிருக்கும் அந்த நண்பன் கற்றுத் தந்த பாடத்தால், யாரையும் கேலி பேசி, இழிவு செய்வதில்லை.- சி.ஓ.சி.ஸ்டீபன்சன், திண்டுக்கல்.தொடர்புக்கு: 98944 12407


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !