பேய்க்கு கை இருக்குமா..
சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள உள்ள, சாரதா தேவி எலிமென்டரி பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது, நீதி போதனை வகுப்பில், பொதுஅறிவு, நீதிகதைகள் சொல்லிக் கொடுப்பர்.ஒரு நாள், என் ஆசிரியர், 'உங்களில் யார் யாருக்கெல்லாம் மணியார்டர் படிவம் பூர்த்தி செய்ய தெரியும்... கை துாக்குங்க...' என்றார். ஒருவர் கூட, கை துாக்கவில்லை. உடனே, ஆசிரியர், 'நாளை ஒவ்வொருவரும், ஒரு மணி ஆர்டர் படிவத்தை, தபால் அலுவலகத்திலிருந்து வாங்கி வாருங்கள்; இலவசமாக கொடுப்பர்...' என்றார்.அடுத்த நாள், அதை எப்படி பூர்த்தி செய்வது என்று சொல்லிக் கொடுத்தார். அதில், 'பேயி' என்ற இடத்தில் ஒருவர் பெயரை எழுதச் சொன்னார். அதைக் கேட்ட நான், 'பேய் எப்படி கையெழுத்துப் போட்டு வாங்க முடியும்...' என்று கிண்டலாக கேட்டேன். அதற்கு, 'பேய்க்கு கால்தான் கிடையாது; கை இருக்கிறதே கையெழுத்துப் போடும்...' என்று சிரித்தபடியே கூறினார்.பணம் வாங்குபவருக்கு, 'பேயி' என்று சொல்வர். இது மாதிரி, நகைச்சுவையுடன் பேசி, எங்களுக்கு நீதி போதனை வகுப்பை, போரடிக்காமல் செய்து விடுவார்.வித்தியாசமான கதை சொல்லி, அதில் இருக்கும் நீதியை, தன் கைச்சரக்கான நகைச்சுவை கலந்து, எங்களை உற்சாகப்படுத்தி விடுவார்! தற்போது என் வயது; 78. எங்கள் ஆசிரியரை மறக்கவே முடியாது.- ஆர்.ஜானகி, சென்னை.