சிங்கம் தந்த கல்வி!
சிவகாசி, அம்மன் கோவில்பட்டி, அரசுப் பள்ளியில், 1987ல், 3ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் சிங்கராஜ். வகுப்பில் நன்றாக படித்து முதல் மதிப்பெண் வாங்கி வந்ததால் மிகவும் பாசம் காட்டி வந்தார்.ஒரு நாள், 'பிளவக்கல் அணைக்கு சுற்றுலா செல்லப் போகிறோம். கட்டணமாக, 10 ரூபாய் செலுத்துங்கள்...' என அறிவித்தார். அம்மாவிடம் கேட்ட போது, 'போக வேண்டாம்...' என கூறி விட்டார். இதை அறிந்ததும், என் அம்மாவைப் பள்ளிக்கு வரச் சொல்லி விளக்கம் கேட்டார்.பயந்த நிலையில், 'என் கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரே பெண் என்பதால், பொது இடங்களுக்கு தனியாக விட பயமாக உள்ளது...' என்றார். அவரை தேற்றி, 'ராணுவ வீரரின் மகளையா, பொத்தி பொத்தி வளர்க்குறீங்க... கிணற்று தவளையாக வளர்க்க கூடாது; பெண் பிள்ளைகள் வெளியுலகத்தை அறிந்து கொள்ள வேண்டாமா... பத்திரமாக அழைத்துச் சென்று வருகிறேன்...' என்றார்.அந்த வாக்குறுதியை தவிர்க்க முடியாமல் அனுமதித்தார் அம்மா.குறிப்பிட்ட நாளில் சுற்றுலாவில் பங்கேற்றேன். ஊஞ்சல், சறுக்கு, ஏத்தலக்கா... இறக்கலக்கா... என, பலவிதமாக விளையாடி மகிழ்ந்தோம். மதிய உணவை கூடி சாப்பிட்டோம். பிற்பகல், 3:00 மணிக்கு அணையில் குளிக்கும் பகுதிக்கு அழைத்து சென்றார் ஆசிரியர். படிக்கட்டில் பாதுகாப்புடன் வரிசையாக நிறுத்தி, சோப்பு தேய்த்து, குளிக்க வைத்தார். பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் அதை செய்தார்.என் வயது, 47; பெயருக்கு ஏற்றாற் போல் செயல்பாடுகளில் சிங்கமாக வாழ்ந்து மகிழ்ச்சி தந்த அந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.- ரா.ஞானசெல்வி, மதுரை.தொடர்புக்கு: 97883 32393