எமா... பிடி சாபம்!
நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த அணிகலன்களைத் திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். விழித்த வீரர்கள் அவர்களைத் துரத்தத் தொடங்கினர். தப்பிக்க நினைத்த திருடர்கள் அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தனர். வீரர்களும் அவர்களை விடவில்லை. அங்கே ஓரிடத்தில் மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். தியானத்தில் இருந்த அவர் கழுத்தில் விலை உயர்ந்த முத்து மாலையைப் போட்டான் ஒரு திருடன்.பிறகு அவர்கள் எல்லாரும் அருகில் இருந்த புதர்களில் பதுங்கிக் கொண்டனர். திருடர்கள் எல்லாரையும் வீரர்கள் வளைத்துப் பிடித்தனர். கழுத்தில் விலை உயர்ந்த மாலையுடன் இருந்த துறவியையும் திருடன் என்றே நினைத்தனர். திருடர்களுடன் அவரையும் சேர்த்து இழுத்துச் சென்று அரசரின் முன் நிறுத்தினர். அரசனும் உண்மையை உணரமால், எல்லாரையும் கழுவில் ஏற்றிக் கொல்லுமாறு கட்டளை இட்டான்.எல்லாரும் கழுவில் ஏற்றப்பட்டனர். திருடர்கள் அனைவரும் இறந்து விட்டனர். ஆனால், துறவி மட்டும் உயிரோடு இருந்தார். இந்த அதிசயத்தைக் கண்ட வீரர்கள் அரசனிடம் ஓடிச் சென்று சொன்னனர்.திடுக்கிட்ட அரசன், அங்கு ஓடி வந்தான். தவறுதலாக துறவிக்குத் தண்டனை தந்ததை எண்ணி வருந்தினான். கழுவில் இருந்து துறவியைக் கீழே இறக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே செய்தனர். வேதனையால் துடித்துக் கொண்டிருந்த துறவியின் கால்களில் விழுந்தான் அரசன். ''நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்து என்னைக் காத்து அருள வேண்டும்.'' என்று வேண்டினான்.அரசனை மன்னித்த அவர் கோபத்துடன் எமன் உலகம் சென்றார். எமனைப் பார்த்து, ''எனக்கு இப்படிப்பட்ட துன்பம் வரக் காரணம் என்ன?'' என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டார்.''நீங்கள் சிறுவனாக இருந்தபோதும் தும்பி ஒன்றைப் படித்து அதை ஈர்க் குச்சியில் கோர்த்து விளையாடினீர். அந்தத் தும்பி பட்ட துன்பத்தை நீங்கள் பட வேண்டும் என்பது விதி. அதனால் தான் இந்தத் துன்பம் நேர்ந்தது.'' என்றார்.இதைக் கேட்டதும் அவரின் கோபம் எல்லை கடந்தது. ''எமனே! பிள்ளைப் பருவத்தில் அறியாமல் செய்யும் பாவத்திற்கு இவ்வளவு கொடிய தண்டனையா? இப்படி விதித்த நீ இதற்குரிய தண்டனையாக பூமியில் மனிதனாகப் பிறப்பாயாக,'' என்று சாபம் தந்தார்.சாபம் பெற்ற எமனே விதுரனாகப் பிறந்தார் என்கிறது புராணக் கதை.***