உள்ளூர் செய்திகள்

தப்பிச்சாச்சு!

கொள்ளக்குடி என்னும் கிராமத்தில், மூன்று கருமிகள் வாழ்ந்து வந்தனர். மூவரும் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் நாள் தோறும், மாலையில் பூங்காவிற்கு சென்று, அமர்ந்து சுவையாக பேசியபடி காலத்தை செலவழிப்பர். ஒருநாள் மாலை அவர்களில் ஒருவன், “நம் ஊர் கோவிலுக்கு வந்திருக்கும் துறவி ஒருவர் மிக சிறப்பாக சொற்பொழிவு செய்கிறார். அவர் பேச்சை கேட்பதற்காக, வெளியூரிலிருந்து மக்கள் கூட்டமாக வருகின்றனர். நாமும் போய் அவர் பேச்சை கேட்டாலென்ன?” என்றான்.அதற்கு இன்னொருவன், “திரைப்படத்திற்கோ, நாடகத்திற்கோ சென்றால் செலவாகிவிடும் என்பதால் தான், நாம் இங்கு வந்து பேசியபடி இருக்கிறோம். அந்த கூட்டத்திற்கு போன பின், அவர்கள் நன்கொடை கேட்டால் நாம் என்ன செய்வது?” என்று கேட்டான்.“அப்படி எதுவும் நடக்காது. ஏதாவது நிகழ்ந்தால், நாம் எப்படியும் பணம் தராமல் சமாளித்து கொள்ளலாம் வாருங்கள்,” என்று மூவரையும் அழைத்து சென்றான், முதலாமவன். துறவியோ பக்தியின் சிறப்பை பற்றி, கோவிலில் உருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். எல்லாரும் தங்களை மறந்து அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.திடீரென்று துறவி, “இந்த கோவிலை பாருங்கள் எவ்வளவு பாழடைந்து கிடக்கிறது. இதை செப்பனிட்டு திருப்பணி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையாகும். ''இத்திருப்பணிக்காக, இன்றிலிருந்து, நிதி திரட்ட போகிறோம். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு ரூபாயாவது உண்டியலில் போட்டால் தான் வெளியே செல்ல முடியும். பொது தொண்டிற்காக பொருளை வாரித் தந்து இறைவனின் அருளை பெறுங்கள்,” என்றார்.இதை கேட்டதும், கருமிகளுக்கு இடி விழுந்தது போலாயிற்று. 'தெரியாத்தனமாக இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே... உண்டியலில் காசு போடாமல் வெளியே செல்ல முடியாது போலிருக்கிறதே... என்ன செய்வது' என்று ஒவ்வொருவரும் சிந்தித்தனர்.உண்டியலை குலுக்கியவாறு வந்தவர், சிறிது சிறிதாக அவர்கள் மூவரையும் நெருங்கி வந்தார். ஒரு கருமி, ஏதோ முடிவுக்கு வந்தவனாய் மற்ற இருவரின் காதுகளிலும் ஏதோ கூறினான். அதை கேட்டதும் மற்ற இருவரின் முகங்களும் மலர்ந்தன.முதலில் பேசிய கருமி, மயக்கம் வந்தவனை போல் கீழே விழுந்தான். உடனே மற்ற இருவரும், 'ஐயோ இவர் மயக்கமாகி விட்டார். வழி விடுங்கள் இவரை மருந்துவரிடம் தூக்கிச் செல்ல வேண்டும்' என்று சொல்லி, மயங்கி விழுந்தவரின் காலை ஒருவரும், தலையை ஒருவரும், பிடித்து தூக்கியபடி வெளியே வந்தனர்.'அப்பாடா தப்பித்தோம்!' என்ற நிம்மதி பெருமூச்சு, மூவரிடம் இருந்தும் வெளி வந்தது.இப்படிபட்ட கஞ்சர்களும் இந்த ஊரில் வாழத்தான் செய்கின்றனர்.குட்டீஸ்... இவர்களை போன்று கருமியாக இருக்காமல், உங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து, அன்பை பெறுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !