முக கவசம்!
'முக கவசம் வாங்கலையோ...' என கூவியபடியே காட்டுக்குள் வந்தது நயவஞ்சக நரி.புல் மேய்வதை நிறுத்தி, நரியை பார்த்தன, பசுக்கள். பல வண்ண முக கவசங்களை அது வைத்து இருந்தது. கவர்ச்சியாக முக கவசம் அணிந்திருந்த நரி, 'கொரோனா என்ற கொடிய வைரஸ் கிருமி உலகில் மனித உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கிறது... 'இப்போது, விலங்குகளுக்கும் வேகமாக பரவி வருகிறது; தேரிக்காட்டில் பல விலங்குகள் மடிந்து விட்டன... நீங்கள் கொஞ்சம் கூட, பயமின்றி முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் புல் மேய்ந்து கொண்டுருக்கிறீங்க...'உங்களுக்கு, உயிர் பயம் துளி கூட இல்லையா... நீங்க வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிர் இழந்து விட கூடாதே என்ற, நல்ல எண்ணத்தில், முக கவசங்கள் எடுத்து வந்திருக்கிறேன்...'இலவசமாக இதை தருகிறேன். வாங்கி அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தால், உயிர் பிழைக்கலாம்... இல்லை என்றால் மனிதர்களை போல் உயிர் இழக்க நேரிடும்... இனி கூட்டமாக புல் மேயாதீர்; தனித்தனியாக பிரிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்...' என, கூறியது.'முட்டாள் நரியே... மனிதர்களை மட்டும் தான் தாக்கும் கொரோனா வைரஸ். இது எந்த விலங்குக்கும் வராது; நீ, சூழ்ச்சி செய்து, சமூக இடைவெளி என ஏமாற்றி பிரித்து வேட்டையாட முயற்சிக்கிறாய்... உன் கூட்டாளிகளுக்கு, எங்களை இரையாக்க துடிக்கிறாய்; உன் தந்திரம் எடுபடாது. ஓடி போய் விடு; குத்தி கொன்று விடுவோம்...' என்றன பசுக்கள்.பசுக்கூட்டத்தில் நயவஞ்சகம் எடுபடாது என்ற, ஏமாற்றத்துடன், எடுத்து வந்த முக கவசங்களோடு திரும்பியது நரி.'சமூக இடைவெளி என பசுக்களை ஏமாற்றி கூட்டத்தை பிரித்து, சுலபமாக வேட்டையாடி புசிக்கலாம் என, சிங்க கூட்டத்திடம் வாக்கு கொடுத்தது தப்பா போச்சே' என எண்ணியது நரி.காத்திருந்து, ஏமாந்த சிங்கங்கள் கோபத்தோடு, நரியை வேட்டையாடி புசித்தன.குழந்தைகளே... திடீர் கரிசனம் காட்டுவோரிடம் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!