உள்ளூர் செய்திகள்

சாணி அள்ளப் போ!

விருதுநகர், கே.வி.எஸ். உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியர், சுப்பையாவை, ஊரில் பார்த்தால், அனைவரும் கையெடுத்துக் கும்பிடுவர்; அவ்வளவு, மதிப்பு, மரியாதை மிக்கவர்.அந்த ஊர் பண்ணையாரின் மாட்டுப் பண்ணையில், வேலை செய்து வந்தார் என் அப்பா. ஒருநாள், பணிமுடிந்து சைக்கிளில் திரும்பிய போது, டூவீலர் மோதி இடுப்பு எலும்பு சேதாரமானது. அவரை, மருத்துவமனையில் சேர்த்தோம்; படுக்கையில் இருந்த அப்பா, 'நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம்; மாட்டுப் பண்ணையில், எனக்கு பதிலா வேலை செய்...' என்றார்.பண்ணையில் கிடைத்த சம்பளத்தில் தான், எங்கள் குடும்பம் நடந்தது. அதனால், அவர் சொன்னபடியே, மாட்டுப் பண்ணையில், சாணி அள்ளி, தொழுவை சுத்தம் செய்வது, பால் விற்பது என, பணிகளை செய்ய ஆரம்பித்தேன்.நான்கு நாட்கள் ஓடின...தகவல் அறிந்த சுப்பையா வாத்தியார், மருத்துவமனைக்கு வந்தார். என்னிடம், 'இனி, வேலைக்குப் போக வேண்டாம்; பள்ளிக்கு போ... மருத்துவ செலவையும், உங்கள் குடும்பச் செலவையும், அன்னை அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். உன் அப்பா குணமாகி வேலைக்குப் போகும் வரை உதவுவர்...' என்றார்.நான், மேற்படிப்பு முடிக்கும் வரை, சுப்பையா வாத்தியார் உதவி செய்தார். அவர் ஊட்டிய உற்சாகத்தால், தனியார் நிறுவனத்தில், செல்வாக்கு மிக்க பணியில் உள்ளேன். என் வயது, 48. இன்றும் சுப்பையா வாத்தியாரை தெய்வமாகப் போற்றி வணங்குகிறேன்!- எம்.ஜெய்சிங், விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !